Last Updated : 06 Nov, 2016 12:25 PM

 

Published : 06 Nov 2016 12:25 PM
Last Updated : 06 Nov 2016 12:25 PM

ஒரு பக்கம் வாரன்ட்; மறுபக்கம் மரக்கன்று நடல்: வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

கடந்த 14 ஆண்டுகளாக கோவை மாநகராட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவரும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

“இந்தக் குப்பைக் கிடங்கை இடம் மாற்றக் கோரிய வழக்கில் ஆஜராகாத மாநகராட்சி ஆணையருக்கு சில நாட்களக்கு முன் பசுமைத் தீர்ப்பாயம் வாரன்ட் பிறப்பித்தது. அதேசமயம், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதியை பசுமைச் சோலையாக மாற்றுவதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவன உதவியுடன் 15 ஆயிரம் மரக்கன்றுகளை நட மாநகராட்சி ஏற்பாடு செய்தது. முரண்பாடான இந்த விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு என்ன?” என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கோவை நகராட்சியாக இருந்த போதும், மாநகராட்சியாக மாறிய பின்னரும், நகரில் சேரும் குப்பை, கழிவுகள், கே.கே.புதூர், உக்கடம் கழிவுநீர்ப்பண்ணை, ஒண்டிப்புதூர் குப்பைக்கிடங்கு பகுதிகளில் கொட்டப்பட்டது.

625 ஏக்கர்

1996-ல் மாநகராட்சிக்கு முதன்முதலாக மேயர் தேர்வு செய்யப்பட்டார். நகரில் குடியிருப்புகள் பலமடங்கு பெருகியதாலும், ஏற்கெனவே குப்பைக்கிடங்கு உள்ள இடத்தின் அருகிலேயே குடியிருப்புகள் அதிகரித்ததாலும், நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள வெள்ளலூர் அருகே 625 ஏக்கரில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியில் நகரில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளை கொட்டி, உரமாக்குவது எனவும், மற்றொரு பகுதியில் நகரில் இருந்து வரும் சாக்கடைக் கழிவுநீரை சுத்திகரித்து, பசும்புல் வளர்க்கவும், மரங்கள் நடவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 2002-ம் ஆண்டிலிருந்து 100 வார்டுகளின் குப்பையை லாரிகள் மூலம் இங்கே கொண்டுவந்து கொட்டத் தொடங்கினர். ஒரு நாளைக்கு 850 டன் முதல் 1,500 டன் வரை குப்பை கொட்டப்பட்டது.

குப்பையை அள்ளவும், லாரிகளில் இங்கு கொண்டுவந்து கொட்டவும் ஒப்பந்தம் விடப்பட்டது. இதற்காக பல கோடி செலவு செய்யப்பட்டும், குப்பைக் கிடங்கு பிரச்சினை சுற்றுப்புற மக்களுக்கு பெரும் தலைவலியாக மாறத் தொடங்கியது.

கொட்டப்படும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பையாகப் பிரிக்க வேண்டும். அதில், மருத்துவக் கழிவுகள், அறுவைசிகிச்சைகளின்போது வெட்டியெடுக்கப்படும் உடல் உறுப்புகளை தனியே பிரித்து எடுத்து, அவற்றை எரித்து அழிக்க வேண்டும். அதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள்க் கையாள வேண்டும். ஆனால், இவற்றில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

ஓரிரு வருடங்களிலேயே மலைபோல குப்பை அதிகரித்துவிட்டது. இதில் கிடக்கும் இறைச்சிக் கழிவுகளைச் சாப்பிட நூற்றுக்கணக்கான நாய்களும், கழுகுகளும் இங்கேயே திரியத் ஆரம்பித்தன. மேலும், குப்பையில் கிடக்கும் இரும்பு, தாமிரம் போன்ற பொருட்களை எடுப்பதற்காக, குப்பை பொறுக்கும் ஆட்கள் குப்பைக்கு தீ வைக்கத் தொடங்கினர்.

மக்களுக்கு பாதிப்பு

அதனால் புகை கிளம்பி, அருகில் உள்ள ஊர் மக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இறைச்சிக் கழிவுகளைத் தின்ற நாய்கள், மக்களைக் கடிக்கத் தொடங்கின. அதுமட்டுமின்றி, மழை வந்தால், இந்த குப்பைக் கிடங்கிலிருந்து ஈக்கள், கொசுக்கள் ஏராளமாக வந்து, மக்களைத் தொந்தரவுக்குள்ளாக்கின.

இதனால், வெள்ளலூர், போத்தனூர், அன்பு நகர், கோணவாய்க்கால்பாளையம், மகாலிங்கபுரம், ராம் நகர், சக்தி ஈஸ்வர் நகர், ஓம்சக்தி நகர், முல்லைநகர், சாமண்ண நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வணிக வளாகங்கள், தொழிற்கூடங்கள், தனியார் அலுவலகங்களில் பணியாற்றுவோரும் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து, குப்பைக் கிடங்கை இடம் மாற்றக் கோரி மனித சங்கிலி, குப்பை லாரிகள் சிறைப்பிடிப்பு, தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு, சாலை மறியல், அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் என கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும், குப்பைக் கிடங்கு எதிர்ப்புக் குழு போன்ற அமைப்புகளும் உருவாகின.

இதையடுத்து, குப்பைக் கிடங்கில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது மாநகராட்சி நிர்வாகம். கிடங்குக்குள் குப்பையை கொண்டுசெல்லும்போதும், குப்பைகளை கொட்டிய பின்னரும் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும் என்று குப்பைக் கிடங்கு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கிடங்கின் உள்ளே அந்நியர் நுழையாமல் இருக்கவும், தீ வைக்காமல் இருக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நீர் பாய்ச்சும் வாகனம் மூலம் தடுப்பு மருந்துகள் தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து, மக்காத குப்பையை மறுசுழற்சிக்கென தனியார் நிறுவனத்துக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டது. கிடங்குக்கு கொண்டுவரப்படும் குப்பையை திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் உரமாக்கும் தொழில்நுட்பமும் அமல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், குப்பையால் எழுந்த நாற்றம், ஈக்கள், கொசுக்கள் தொல்லை, புகை ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்தது. இப்போதும் இந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போது மூக்கைப் பொத்திக்கொண்டே செல்லவேண்டிய நிலை.

மாநகராட்சி நிர்வாகம் விதிமுறைப்படி குப்பைக் கிடங்கை அமைக்கவில்லை. மக்களுக்கான பிரச்சினையையும் அவ்வப்போது சரிசெய்கிறதே தவிர, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்து, நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது.

பசுமை தீர்ப்பாயம்

மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் பசுமை தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில்,மாநகராட்சி ஆணையருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து ஈஸ்வரன் கூறியது:

மாநகரின் குப்பைக் கிடங்கை தொலைநோக்கோடு ஆய்வு செய்து, மத்திய சுற்றுச்சூழல் விதிமுறைகளின்படி மாநகராட்சி நிர்வாகம் அமைத்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே இங்கு நடக்கவில்லை. 2000-ம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிகளின்படி, குப்பைக் கிடங்கு அமைக்க சில அம்சங்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

குப்பைக் கிடங்கு அமைக்கும் பகுதி மக்கள் வசிக்கும் பகுதியா? அங்கு அனுமதிக்கப்பட்ட குடியிருப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு? புதிதாக குடியிருப்பு அமைக்க லே-அவுட்டுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா? குப்பைக் கிடங்கு அமைத்தால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களைத் தெரிவித்து, நகரமைப்புக் குழுவிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல, நிலத்தடி நீர் எந்த அளவீடுகளில் இருக்கிறது? அதன் தரம் என்ன? நீரோட்டம் எந்தப் பகுதிக்கு செல்கிறது. இங்கு குப்பைக் கிடங்கு அமைத்தால், கழிவின் சாறு எந்த அளவுக்கு நிலத்துக்குள் ஊறும். அது நிலத்தடி நீரோட்டத்தில் கலந்து, எவ்வளவு தூரம் பாதிக்கும்? உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்து, இது தொடர்பான அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், குப்பைக் கிடங்கிலிருந்து கிளம்பும் புகையால், விமான சேவை பாதிக்குமா? பறவைகள் பறப்பதால் விமானங்களுக்கு தொந்தரவு ஏற்படுமான போன்ற விஷயங்களை தெளிவுபடுத்தி, விமானநிலைய ஆணையத்திடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.

முக்கியமாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும். அந்த வாரியம்தான், மற்ற துறைகளிடம் விளக்கம் பெற்று, இறுதியில் தடையில்லா சான்றை மாநகராட்சிக்கு அளித்திருக்க வேண்டும். இவை எதுவும் இந்த குப்பைக் கிடங்கு விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை.

மாறாக, குப்பைக் கிடங்கு அமைத்து 8 வருடங்கள் கழித்தே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. வாரியம் அப்போதும் சில விதிமுறைகளை வகுத்து, ஒரு வருடத்துக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

அந்த விதிமுறைப்படி, ஒவ்வொரு வருடமும் குப்பைக் கிடங்கின் நிலை என்ன? என்பது குறித்தும், அதன் மேலாண்மை குறித்தும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அனுப்ப வேண்டும். அதையெல்லாம் இவர்கள் செய்யவேயில்லை.

இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களைக் கேட்டுப் பெற்றேன். அதை வைத்துதான், பசுமைத் தீர்ப்பாயத்தில் 2013-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தேன். குப்பைக் கிடங்கு அமைக்கும்போதே அருகில் நிறைய குடியிருப்புகள் இருந்துள்ளன. மேலும், தொடர்ந்து லே-அவுட் அனுமதி கொடுத்ததால், புதிதாக குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டபோது, மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரிக்க, மறுசுழற்சி செய்ய போதுமான ஆட்களும் இல்லை. போதிய கருவிகளும் இல்லை. உரிய தொழில்நுட்பத்தில் குப்பையை கையாளாவிட்டால், மீத்தேன் வாயு உருவாகி, அது தீப்பிடித்து எரியும். புகை மற்றும் தொற்று நோய்கள் பரவும். இதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

இது சரியான போக்கு அல்ல. இதற்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும். எங்கள் நோக்கம், குப்பைக் கிடங்கை இங்கிருந்து அகற்றவேண்டும் என்பதல்ல. தற்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உரிய விதிமுறைகளின்படி குப்பைக் கிடங்கை பராமரித்தாலே, மக்களுக்கு எந்த இடையூறும் வராது என்றார்.

பழகிப்போன நாற்றம்…

குப்பைக் கிடங்குக்கு அருகேயுள்ள மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் கூறும்போது, “இங்கு 4 ஆண்டுகளுக்கு முன் குடிவந்தோம். துர்நாற்றம், ஈக்கள், கொசுத் தொல்லை, புகை உள்ளிட்ட பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். குப்பையில் தீப்பிடித்தால் ஊரே புகையில் மூழ்கிவிடும். இப்போது எங்களுக்கு இதுபழகிவிட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x