

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ‘ஸ்கிரப் டைப்பஸ்' எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்ட 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவமனை முதல்வர் டி.நேரு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: இந்த வகை காய்ச்சல் பல ஆண்டுகளாக உள்ள ஒன்றுதான். நாய், பூனை, மாடுகள் மேல் வளரும் ஒட்டுண்ணிகள் அல்லது மண்ணில் உள்ள ஒட்டுண்ணிகள் கடிப்பதன் மூலம் பரவும் தன்மை கொண்டது.
எனவே, செல்லப்பிராணிகளை தொட்டு விளையாடுபவர்கள், மண்ணில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் ஒட்டுண்ணியால் கடி பெருவதன் மூலம் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்த நோய் ஏற்பட்டால், காது மடல், அக்குள் உள்ளிட்ட உடலின் மறைவான பகுதிகளில் தடிப்புகள், கொப்புளங்கள் அல்லது சொரி ஏற்படும். அதைத் தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு ஆகியவை ஏற்படும். இந்த அறிகுறிகள் கண்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் இதற்காக சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பகட்டத்திலேயே இதைக் கண்டறிந்தால், எளிதாக மாத்திரைகள் மூலமாகவே நோயை உடனடியாக குணப்படுத்த முடியும். சரியாக கவனிக்காமல் நோய் பாதிப்பு தீவிரமடைந்தால், மூளைக்காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.