

வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்
மழைக்காலத்தில் ஏரிகளை உடைத்து சேதம் ஏற்படுத்தும் நிகழ்வுகளை தடுக்க சந்தேகத் துக்குரிய நபர்களை முன்கூட்டியே கைது செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் தெரிவித்துள் ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முன்கூட்டியே தமிழக அரசு, வெள்ளத்தடுப்பு பணிகளை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட குழுக்களும், இதர மாவட்டங் களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி களும் ஆலோசனை, கண் காணிப்பு பணிகளுக்காக நியமிக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போதைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தில் அமைக்கப்பட் டுள்ள பேரிடர் வல்லுநர் குழுவின் முதல் கூட்டத்தில், உறுப்பினர்கள் அளித்த ஆலோசனைகள் குறித்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
கடந்தாண்டு நிகழ்வுகள் தவிர, முந்தைய ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் கணக்கெடுத்து அவற்றின் தன்மைக்கேற்ப 4 பிரிவுகளாக பிரித்துள்ளோம். அவ்வாறு கண்டறியப்பட்ட 3 ஆயிரத்து 994 இடங்களில், மிக அதிக பாதிப்பு பகுதியாக கண்டறியப்பட்ட 712 இடங்களில் முந்தைய மழைக் காலங்களில் 5 அடி மற்றும் அதற்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. இப்பகுதிகளுக்கு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அதற்கடுத்த படியாக 3 அடியிலிருந்து 5 அடி, 1.5 அடி முதல் 3 அடி வரை என தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தவிர, இப்பகுதிகளில் பாதிப்பு தொடர்பான வரைபடம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப் படையில் பகுப்பாய்வு செய்யப் பட்டு, திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த வரைபடம் மூலம், எதிர்காலத்தில் பாதிப்பை முழுமையாக தவிர்க்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்த இடங்களில் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு, ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 940 ஏரிகள் உட்பட 17 ஆயிரத்து 451 நீராதாரங்கள், சுத்தப்படுத் தப்பட்டு, தூர்வாரப்பட்டுள்ளன. 9 ஆயிரத்து 630 கிமீ நீர்வழிப் பாதைகள் சீரமைக்கப்பட்டு, மணல் மேடுகள் அகற்றப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 633 சிறுபாலங்கள், 15 ஆயிரத்து 870 மேம்பாலங்களின் கீழ், மழைநீர் பாதிப்பில்லாமல் வடிந்து செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அடையாறு ஆற்றை சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, மணல் திட்டுகள் அகற்றப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், தூர்வாரு தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், வாரம் ஒருமுறை வருவாய் நிர்வாக ஆணையரகத்துக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மாவட்டத்துக்கு நியமிக் கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சில பகுதிகளில் வெள்ளத்துக்கு காரணம் ஏரிக்கரைகளை உடைத்து விட்டது தான் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, அவ்வாறு உடைத்துவிடக்கூடும் என்று சந்தேகப்படும் நபர்களை முன் கூட்டியே கைதுசெய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
32 மாவட்டங்களில்..
இது தவிர, 32 மாவட்டங்களிலும் ஏற்கெனவே வெள்ள பாதிப்புக் குள்ளான ஆயிரத்து 479 பகுதிகளில், நீச்சல், மலையேற்றம் தெரிந்த 10 இளைஞர்கள், தகவல் அளிக்கும் நோக்கில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முறை, மாநிலம் முழுவதும் ஆயிரத்து 200 காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், வனத்துறையினரும் வெள்ளத் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவி தற்போது கோரப்பட்டுள்ளதா என கேட்ட போது, ‘‘நமக்கு தேவை ஏற்படும்போது உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும்’’ என்று கே. சத்யகோபால் தெரிவித்தார்.