

தென்காசி அருகே சிலர் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டது தொடர்பாக ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர் மதிவாணன். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
ராயகிரியில் நண்பரின் தந்தை இறப்புக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த மற்றொரு சமூகத்தினர் என்னை சாதியைச் சொல்லித் திட்டினர். நான் அங்கிருந்து செல்லாவிட்டால் இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என நண்பரை மிரட்டினர்.
இதனால், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டேன். மறுநாள் நான் வந்ததற்காக என் நண்பர்களுக்கு அபராதம் விதித்து காலில் விழக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
சிலரை ஊரை விட்டு ஒதுக்கியும் வைத்துள்ளனர். அவர்களுக்குக் கடைகளில் எந்தப் பொருட்களும் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். 9 பேர் மீது போலீஸார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், யாரையும் கைது செய்யவில்லை. இதனால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சதி குமார் சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார். பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சியர் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.12-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.