

வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் 2,700 காவ லர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அதிரடிப்படை காவலர்கள் மற்றும் வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர். நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், அதன் நிர்வாகிகள் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினமும் இரண்டாம் கட்டமாக சோதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதற்கு துணையாக இருந்த 8 அமைப்புகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ் நாட்டில் பாதுகாப்பை அதிகரித்து சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளுடன் முக்கிய இடங்களில் வாகன தணிக்கையை அதிகரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் 1,500 காவலர்கள் மற்றும் 200 பயிற்சி காவலர்கள் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள், பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகளின் வீடுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வேலூர் கஸ்பா, ஆர்.என்.பாளையம், கொணவட்டம், பேரணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் காவலர்கள் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வரும் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய சமூக நல்லிணக்க பேரணி நடைபெறவுள்ளது.
இதற்கு, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் பங்கேற்க வுள்ளனர். இதன் காரணமாக வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பொழுது போக்கு இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், கோயில்களுக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
வஜ்ரா வாகனத்தை முக்கிய இடங்களில் நிறுத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை 1,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகள், பேருந்து நிலையங்கள், பேருந்து பணிமனைகள், ரயில் நிலையங்கள், அண்ணாமலையார் கோயில், முக்கிய கோயில்கள், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகின்றன. மேலும், அசம்பாவித சம்பவங்கள் ஏதாவது நடந்தால் உடனடியாக அங்கு செல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.