மகளின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு விடுப்பு மறுப்பு: உதவி ஆய்வாளருக்கு டிஜிபி மனம் வருந்தி கடிதம்

டிஜிபி சைலேந்திர பாபு | கோப்புப் படம்
டிஜிபி சைலேந்திர பாபு | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு விடுப்பு மறுக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு, மனம் வருத்தத்துடன் டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் எழுதியுள்ளார்.

சிவகங்கை மாவட்ட, திருப்புவனம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சந்தான ராஜ். இவர் தனது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடுப்பு அளிக்க கோரி விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால், உயர் அதிகாரிகள் விடுப்பு வழங்காத காரணத்தால் அவரால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.

இந்நிலையில், இவருக்கு ஆறுதல் தெரிவித்து டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் எழுதியுள்ளார். அதில், தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துகொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொலி வாயிலாக கண்டறிய நேர்ந்தது. தங்கள் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைகிறேன்.

இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்க கூடாது என்பதை மேல் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தங்களது மகளின் நிச்சியதார்த்த நிகழ்ச்சி நடத்த போதுமான நாட்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in