பல்கலை. பெயரிலுள்ள 'மனோன்மணியம்' பெயரை 'மனோன்மணீயம்' என மாற்ற பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

பல்கலை. பெயரிலுள்ள 'மனோன்மணியம்' பெயரை 'மனோன்மணீயம்' என மாற்ற பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 
Updated on
1 min read

மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயரில், 'மனோன்மணியம்' என்பதை 'மனோன்மணீயம்' என மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை சேர்ந்த முத்து சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடியவர் மனோன்மணீயம் பி.சுந்தரம் பிள்ளை ஆவார். அவர் நினைவாக நெல்லையில் 1990-ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்தப் பெயரில் பிழை உள்ளது. அனைத்து புத்தகங்களிலும் பி.சுந்தரம் பிள்ளை இயற்றிய நாடகத்தின் பெயரும் மனோன்மணீயம் என்றே உள்ளது.

அதன்படி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயரை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என மாற்றக்கோரி பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பல்கலைக்கழகத்தின் பெயரில் 'மனோன்மணியம்' என்று இருப்பதை 'மனோன்மணீயம்' என மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ''மனுதாரரின் மனுவை உயர் கல்வித்துறை செயலாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் 6 வாரத்தில் பரிசீலித்து சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in