Published : 28 Sep 2022 12:59 PM
Last Updated : 28 Sep 2022 12:59 PM

ரயில் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய 'ரூட் தல' மாணவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: 'ரூட் தல' என்று கூறி புறநகர் ரயிலில் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு, 6 வார சனிக்கிழமைகளில் மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ரூட் தல' எனக்கூறி புறநகர் ரயிலில் பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர் மீது ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மாணவநுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர், சென்னையில் உள்ள மித்ரா மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு ஆறு சனிக்கிழமைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

மேலும், மாணவனின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காகவே நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய மாணவனுக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிபந்தனையை விதித்துள்ளதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x