Published : 14 Nov 2016 11:46 AM
Last Updated : 14 Nov 2016 11:46 AM

பல்வேறு பிரச்சினைகள் குறித்த புரிதலை மக்களிடம் ‘தி இந்து’ ஏற்படுத்துகிறது: புதுக்கோட்டை வாசகர் திருவிழாவில் மருத்துவர் கு.சிவராமன் பாராட்டு

வாசகர் திருவிழா 2016 | புதுக்கோட்டை

உணவு அரசியல், தண்ணீர் அரசியல், விளையாட்டு அரசியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த புரிதலை பொதுமக்களிடம் ‘தி இந்து’ ஏற்படுத்துகிறது என்று புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்று வாசகர்களின் அமோக ஆதரவுடன் 3-ம் ஆண்டை நிறைவு செய்து, 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இத்தருணத்தில் இனியதொரு கொண்டாட்டமாக வாசகர் திருவிழா கடந்த வாரம் ஓசூரில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களின் வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா, புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள நகர்மன்றத்தில் (டவுன்ஹாலில்) நேற்று நடைபெற்றது.

‘தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரியர் டிஐ.அரவிந்தன் வரவேற்றார். முதுநிலை பொது மேலாளர் வி.பாலசுப்ரமணியன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மருத்துவர் கு.சிவராமன், கவிஞர் ஜீவி, எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

விழாவில் மருத்துவர் கு.சிவராமன் பேசியது:

நான் 7, 8-ம் வகுப்பு படிக்கும்போது வீட்டில் ஆங்கில இந்து-வை வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லி அதில் உள்ள வார்த்தைகளின் பொருளைக் கேட்பார்கள். அப்போது, தமிழில் இந்து செய்தித்தாள் வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தது உண்டு. அந்தக் கனவு 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேறியது.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்ற நாளிதழ்களைப் போல சராசரி இதழ் அல்ல. இதுபோன்ற நாளிதழ் தமிழில் இல்லை என பெருமிதத்துடன் கூறலாம். வெறும் செய்திகளை மட்டும் வழங்காமல், செய்தி குறித்த ஆழமான தகவல்களை, சிந்தனைகளை, கருத்துகளை ‘தி இந்து’ வழங்கிவருகிறது.

மருத்துவத் துறையில் பாரபட்சமின்றி அனைத்து பிரிவுக்கும் போதுமான முக்கியத்துவம் கொடுத்து ‘தி இந்து’ செய்திகளை வெளியிடுகிறது. எனக்கு, சுற்றுச்சூழல் குறித்த பெரிய அளவிலான புரிதலை ஏற்படுத்தியது ‘தி இந்து’வில் பணியாற்றும் செய்திப்பிரிவு நண்பர்கள்.

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களின் வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா, புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள நகர்மன்றத்தில் (டவுன்ஹாலில்) நேற்று நடைபெற்றது. இதில், ஆர்வத்துடன் கலந்துகொண்ட வாசகர்கள்.

மேற்கத்திய பெண் எழுத்தாளர் ஒருவர், ராபினைக் காணோம் எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை மேற்கத்திய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாடுகளில் வசந்தக் காலத்தில் பெருவாரியாகக் காணப்படும் ராபின் எனும் பறவை இனம் எண்ணிக்கை குறைந்து அழிந்துவரும் வரலாற்றை அவர் எழுதினார்.

அமெரிக்காவில் ராபின் பறவை சாப்பிடும் சோளம் பயிரில், பூச்சிக்கொல்லியாக தெளிக்கப்படும் டிடிடீ எனும் ரசாயனம் அந்தப் பறவையின் அழிவுக்குக் காரணம் என ஆய்வு செய்து கண்டுபிடித்து எழுதினார். டிடிடீ எனும் ரசாயன பூச்சிக்கொல்லி அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகில் பல்வேறு நாடுகளில் பிற்காலத்தில் தடை செய்யப்பட அவரது எழுத்து மிகப்பெரிய காரணமாக இருந்தது. அதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்திய பல செய்திக் கட்டுரைகளை ‘தி இந்து’ வெளியிட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாரதியார் ஆங்கில இந்துவில் எழுதிய கட்டுரைகள் பல சுதந்திர வேட்கையை மக்களிடம் ஏற்படுத்தின. அதுபோன்ற தேவை இப்போது இல்லை. ஆனால், இப்போது வேறு சில தேவைகள் உள்ளன. பல்வேறு பிரச்சினைகளின் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து ‘தி இந்து’ தொடர்ந்து எழுதி வருகிறது. குறிப்பாக உணவு அரசியல், தண்ணீர் அரசியல், விளையாட்டு அரசியல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்த புரிதலை பொதுமக்களிடம் ‘தி இந்து’ ஏற்படுத்துகிறது.

நாட்டில் தற்போது பெரும் சவாலாக, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட தொற்றா நோய்கள் உள்ளன. இப்போது வாழும் தலைமுறைக்கு புற்றுநோய் சவாலாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பெரும் சவாலாக உள்ளது. ஒரு காலத்தில் நீண்ட காலம் கழித்து திருமணம் செய்வது, குழந்தைகளுக்கு பால்கொடுக்காதது போன்ற காரணங்களால் பெண்களுக்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோய் இப்போது திருமணம் ஆன 30-35 வயது பெண்களுக்குக்கூட ஏற்படுகிறது. இதற்குக் காரணம் உணவுப் பொருட்களில் உள்ள ரசாயனம்.

பெருகிவரும் மதுப் பழக்கம் இந்த தலைமுறையினரை நோயாளிகளாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. சிறிதளவு மது அருந்துவது நல்லது என ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. சில மருத்துவர்கள் அப்படி கூறுவதாகச் சொல்கின்றனர். மது நல்லது என, அறம் சார்ந்த எந்த மருத்துவரும் கூற மாட்டார். மதுவால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு பலர் அவதிப்படுகின்றனர். கல்லீரல் சிர்ரோஸில் எனும் பாதிப்பு ஏற்பட்டால் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும் அல்லது ரூ.48 லட்சம் செலவு செய்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

மதுவால் ஏற்படும் பாதிப்புகள், பின்விளைவுகள், தாக்கம் குறித்து தெளிவான புரிதலையும், விழிப்புணர்வையும் ‘தி இந்து’ ஏற்படுத்தியுள்ளது. சமூகம் சார்ந்த அவலங்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தரவுகளை ‘தி இந்து’ நாளிதழ் தொடர்ந்து கொடுத்து உதவுகிறது என்றார் மருத்துவர் கு.சிவராமன்.

சென்னை பதிப்பு தலைமைச் செய்தியாளர் வி.தேவதாசன் ஏற்புரையாற்றினார். நிறைவாக திருச்சி பதிப்பு மண்டல பொது மேலாளர் கே.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

இவ்விழாவை, ‘தி இந்து’வுடன் லலிதா ஜூவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், புதுகை பாரதி கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து வழங்கின. நிகழ்ச்சியில், முகவர்கள், துணை முகவர்கள், வாகன ஓட்டுநர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பங்கேற்ற வாசகர்கள் அனைவருக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

வாசகர் திருவிழாவையொட்டி, ‘தி இந்து’பதிப்பக நூல்கள் வாசகர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன. வாசகர்கள் நூல்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

சிவக்குமார் (அரசுப் பேருந்து ஓட்டுநர்):

நான் பேருந்தை ஓட்டிச் செல்லும்போது ‘தி இந்து’ தமிழ் நாளிதழை யார் வைத்திருந்தாலும் அவர்களை என் உடன்பிறந்தவர்களைப் போலவே கருதுகிறேன். அப்படியான ஒரு பாசத்தையும், பிணைப்பையும் ‘தி இந்து’ ஏற்படுத்துகிறது.

பாலசுப்பிரமணியன் (பட்டுக்கோட்டை):

நாளிதழ்களில் ‘தி இந்து’வைப் பார்ப்பது படிப்பது என்பது என் பிள்ளையைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளிலும் மக்களுக்கு நல்ல தரவுகளை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. செய்தித்தாள் வாசிப்பு குறைந்து வரும் சூழலில், பத்திரிகை மீதான நம்பகத்தன்மையை ‘தி இந்து’ ஏற்படுத்தியுள்ளது.

திருநாவுக்கரசு (பொன்னமராவதி):

எந்த நாளிதழும் தராத ஒரு வசதியை ‘தி இந்து’ நாளிதழ் தந்துவருகிறது. அதுதான் ‘உங்கள் குரல்’ பகுதி. தங்கள் பகுதியின் குறைகள் குறித்து, இலவசமாக போனில் தெரிவிக்கும் இந்த ஏற்பாடு சிறப்பானது. வாசகர்களின் கருத்துகளைக் கேட்டு அது குறித்த கூடுதல் விவரங்களுடன் செய்தியை வெளியிடும் நாளிதழாக ‘தி இந்து’ தமிழ் செயல்படுவது பாராட்டுக்குரியது.

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x