

சென்னையில் விதிமீறல் கட்டிடங் களை மறுவரையறை செய்வது தொடர்பான கண்காணிப்பு கூட்டத்தை முறையாக நடத்தாதது குறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கண்காணிப்பு கமிட்டி உறுப்பினர் ஏ.ஜி.தேவசகாயம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
விதிமீறல் கட்டிடங்களை மறுவரை யறை செய்வது தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தலைமையில் கண்காணிப்பு கமிட்டி அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நானும் இந்த கமிட்டியின் உறுப்பி னராக உள்ளேன். இந்த கமிட்டி மாதந்தோறும் முறையாக கூட்டப்பட வில்லை. இதனால் விதிமீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:
மறுவரையறை தொடர்பாக உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதிகாரிகள் அதை சீர்குலைக்கும் விதமாக செயல்படுவது வேதனைக்குரியது. விதிமீறல் விஷயத்தில் தமிழக அரசும் எந்த கொள்கை முடிவும் எடுப்பதில்லை. நாங்கள் போடும் உத்தரவுகளையும் முறையாக கடைபிடிப்பதில்லை. தீ தடுப்பு பாதுகாப்பு விதிமுறை களைப் பின்பற்றாத கட்டிடங்கள் முன்பாக அதுதொடர்பாக எந்த அறிவிப்பு பலகையும் இதுவரை வைக்கப்படவில்லை. அந்தக் கட்டிடங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், பிறகு நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் அமைதி காக்கின்றனர்.
விதிமீறல் கட்டிடங்களை மறு வரையறை செய்வது தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களில் 2 சதவீதம் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. மற்றவை நிராகரிக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் அந்தக் கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை சிஎம்டிஏ எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே சிஎம்டிஏ உறுப்பினர் செய லர் ஒரு வாரத்துக்குள் கண்காணிப்பு கமிட்டி கூட்டத்தை கூட்டி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து அதில் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.
அதேபோல, உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அதற்காக அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்று சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.