Published : 19 Nov 2016 11:24 AM
Last Updated : 19 Nov 2016 11:24 AM

முதுமலை கராலில் ‘சுள்ளிக் கொம்பனுக்கு’ விடுதலை: சுதந்திரக் காற்றை சுவாசித்ததால் உற்சாகம்

பந்தலூர் மேங்கோரேஞ்ச் பகுதியில் 2 பேரைக் கொன்றதால் பிடிக்கப்பட்டு, முதுமலையில் கராலில் அடைக்கப்பட்டிருந்த யானை ‘சுள்ளிக் கொம்பன்’ சுதந்திரக் காற்றை சுவாசித்தது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் கடந்த மார்ச் மாதம், தனியார் தேயிலைத் தோட்டத்தில் காவலாளியாகப் பணிபுரிந்த மணிசேகர் மற்றும் கர்ணன் ஆகியோரை யானை தாக்கிக் கொன்றது. இதையடுத்து, யானையைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பெயர் வைத்த மக்கள்

இப்பகுதியில், சிறிய தந்தம் மற்றும் ஒற்றை தந்தம் கொண்ட யானைகள், மனிதர்களைத் தாக்கிக் கொல்வதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இந்த யானைகளுக்கு அவர்கள் ‘சுள்ளிக் கொம்பன்’ மற்றும் ‘ஒற்றைக் கொம்பன்’ என்று பெயரிட்டனர்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி, சுள்ளிக் கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, கும்கிகள் உதவியுடன் பிடித்தனர். பின்னர், தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு இந்த யானை கொண்டு செல்லப்பட்டது.

7 மாதத்துக்கு பின்னர்

பிடிபட்ட சுள்ளிக் கொம்பன், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் அமைக்கப்பட்டுள்ள கராலில் அடைக்கப்பட்டது. இந்த யானையின் தும்பிக்கையில் உள்ள வெட்டுக் காயத்துக்கு, வனத் துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், கடந்த 7 மாதங்களாக இந்த யானை கூண்டில் அடைக்கப்பட்டு, அதில் தங்கியிருக்க பழக்கப் படுத்தப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக பழக்கப்படுத்தப்பட்டதால், இந்த யானை பாகன்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படத் தொடங்கியது. இதனால், இந்த யானையைக் கூண்டிலிருந்து விடுவிக்க வனத் துறையினர் முடிவு செய்தனர்.

கால்நடை மருத்துவர்கள் ஆய்வு

இதற்கிடையில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் ஷபி, பாலாஜி ஆகியோர், முதுமலைக்கு வந்தனர். இவர்கள், கராலில் அடைக்கப்பட்டுள்ள சுள்ளிக் கொம்பனை நேற்று காலை ஆய்வு செய்தனர். பின்னர், கூண்டிலிருந்து கும்கிகள் துணையுடன் சுள்ளிக் கொம்பன் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, கராலிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட யானையை, அங்கிருந்து மரத்தில் கட்டி வைத்தனர்.

சுதந்திரக் காற்றை சுவாசித்த யானை, மகிழ்ச்சியில், தலையில் மண்ணை வாரி வீசி உற்சாகமாகக் காணப்பட்டது.

இந்த யானை பாம்பாக்ஸ் யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் என்றும், அங்கு அதற்கு கும்கிக்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வி.ஏ.சரவணன் தெரிவித்தார்.

முதுமலை தெப்பக்காட்டில் கராலில் அடைக்கப்பட்டிருந்த சுள்ளிக் கொம்பனை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள்.

பார்வையில் கோளாறு…

கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சுள்ளிக் கொம்பனுக்கு பார்வைக் கோளாறு இருப்பதாக வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த யானையை ஆய்வு செய்த சென்னை கால்நடை மருத்துவர் ஷபி, “யானையின் இடது கண்ணில் பார்வைக் குறைபாடு உள்ளது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x