

முடிச்சூரில் கடந்த ஆண்டு மழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. அதனால் இந்த ஆண்டு மீண்டும் அப்பகுதி மழையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் முடிச்சூர் பகுதி முற் றிலும் சேதமடைந்தது. அமுதம் நகர், சக்தி நகர், ஏ.எம்.காலனி, சாமி காலனி, துர்கா அவென்யு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இப்பகுதியில் சீரமைப்பு பணிகள் சரிவர நடை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு குடியிருப்போரிடையே நிலவுகிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தாமோதரன் கூறும்போது, “குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர் நேரடி யாக ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை. முடிச்சூர் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் மழைநீர் கால்வாய்களை அமைக்கவில்லை. ஊராட்சியில் உள்ள ஏரி குளங்களுக்கு நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாய்களும் சீரமைக்கப்படவில்லை” என்றார்.
முடிச்சூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் கூறும்போது, “அடையாற்றை சீரமைக்க வேண்டி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. உண்ணாவிரத போராட்டம் நடந்த பிறகே சீரமைப்பு பணி தொடங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்பது அரசுக்கு நான்கு தெரிந்தும் நிரந்தர சீரமைப்பு பணிகளைச் செய்யாமல் இருப்பது வேதனையாக உள்ளது” என்றார்.
இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மழையினால் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கே இன்னும் நிதி வழங்கப்படவில்லை. தற்போது செய்யப்படும் பணிக்கும் அரசு உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் என்ன செய்யமுடியும்? நிரந்தர தீர்வுகாண அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.