

வங்கி ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு தொடர்கதையாக உள்ளது. பல இடங்களில் ஏடிஎம்கள் இயங்காததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் வங்கி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக் கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இதனால் வங்கிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் பலரும் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றனர். ஆனால் பணத்தட்டுப்பாடு காரண மாக பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்காமல் உள்ளன. ஒரு சில ஏடிஎம்களில் பணம் நிரப்பப் பட்டாலும், சில மணிநேரங்க ளிலேயே அவை தீர்ந்து விடுகின்றன. பணத் தட்டுப்பாடு காரணமாக நேற்று முன்தினம் பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப் பட்டிருந்த நிலையில் நேற்றும் பல ஏடிஎம்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.
பணம் இல்லை
புரசைவாக்கத்தில் ஒரு ஏடிஎம் மில் பணம் எடுக்க வந்த ராஜேஷ் என்பவர் இதுபற்றி கூறும்போது, “இப்பகுதியில் பொதுத்துறை, தனியார் வங்கிகளின் 20-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. ஆனால், எந்த ஏடிஎம்மிலும் பணம் இல்லை. ஒரே ஒரு ஏடிஎம் மட்டும் திறந்துள்ளது. அங்கு கூட்டம் அதிகமாக உள்ளது. வங்கிகளில் சென்று பணம் எடுக்கலாம் என்றால் அங்கேயும் பணம் இல்லை எனக் கூறுகின்றனர்’’ என்றார்.
திருவல்லிக்கேணியை சேர்ந்த சுதா என்பவர் கூறும்போது, “நான் கடந்த 10 நாட்களாக பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகிறேன். வங்கிக்குச் சென்றால் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என பார்த்தால் அவை யும் மூடப்பட்டுள்ளது” என்றார்.
அண்ணாசாலையில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் நேற்று பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் அவர்களுக்கு பணம் கிடைக்காத தால் வங்கி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.