

கோவை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகள் சிகிச்சை முடியும் முன்பே காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பான சிகிச்சை அளிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனியார் மருத்துவமனையின் ஏஜென்டுகள் நோயாளிகளை அழைத்துச் சென்று பணத்தைப் பறித்து மோசடியில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
கோவை மாநகர், மாவட்டத்தில் விபத்து மற்றும் மோதல் சம்பவங்களில் பாதிக்கப்படுவர்களில் பெரும்பாலானோர் முதலில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அவர்கள் தேவையான சிகிச்சைக்குப் பிறகு எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுகின்றனர்.
இந்த நோயாளிகளில் 40 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று, முறையாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னரே காணாமல் போய்விடுவதாக, அப்பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களிடம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கிறோம் எனக் கூறி ஏஜென்டுகள் அழைத்துச் சென்றுவிடுவதே இதற்குக் காரணம் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஈரநெஞ்சம் அமைப்பின் பி.மகேந்திரன் கூறியதாவது: எலும்பு முறிவு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியை தனியார் மருத்து வமனையைச் சேர்ந்தவர்கள் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நோயாளியிடம் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டதோடு, டிஸ்ஜார்ஜ் செய்யும்போது ரூ.10 ஆயிரத்தையும் கூடுதலாகப் பெற்றுள்ளனர். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டை நம்பி தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளில் சிலர் அங்கேயும் முழுமையான சிகிச்சை பெற முடியாமலும், அரசு மருத்துவமனைக்கு மீண்டும் வர முடியாமலும் தவிப்பதைப் பார்க்கிறேன்.
இதுபோன்ற செயல்களில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டு வருவது கண்டிக்கத் தக்கது. கோவை அரசு மருத்துவமனையில் சிறுசிறு குறைகள் இருந்தாலும் தரமான சிகிச்சை கிடைக்கிறது. இதைத்தடுக்க அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் அனுமதிக்கப்படும்போது அவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார். இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரேவதி கூறுகையில், அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு முழுமையான, தரமான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிலரின் பேச்சைக் கேட்டு நோயாளிகள் திடீரென படுக்கையில் இருந்து சென்று விடுகின்றனர். அவ்வாறு செல்பவர்களை தடுக்கும் உரிமை இல்லை. என்றாலும், அவ்வாறு சென்றவர்களுக்கு முழு சிகிச்சை கிடைக்கிறதா என்றால் அதுவும் கேள்விதான். கடைசியில் நோயாளிகள் பணத்தை இழக்கின்றனர். சில நேரங்களில் பணம் கட்ட முடியாமல் சிகிச்சையையும் இழக்கின்றனர் என்றார்.