கல்விக் கடனை பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் செலுத்தலாமா?

கல்விக் கடனை பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் செலுத்தலாமா?
Updated on
3 min read

ஐநூறும்.. ஆயிரமும்..: உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

ழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ‘தி இந்து உங்கள் குரலில்’ பொதுமக்கள் பதிவு செய்திருந்த சந்தேகங்களுக்கு முன்னாள் வங்கியாளர் ‘ப்ரைம் பாயின்ட்’ கே.னிவாசன் தரும் பதில்கள் இங்கே..

பெரிய கடைகளில் வாடிக்கையாளர்களிடம், செல்லும் நோட்டுகளை மட்டுமே வாங்கி, தங்களிடம் உள்ள பண மதிப்பு நீக்கம் செய்யப் பட்ட நோட்டுகளையும் சேர்த்து வங்கியில் செலுத்துகின்றனர். இதனால் கணக்கில் வராத கறுப்புப் பணத்தையும் வெள்ளையாக்கு கிறார்களே, இதைத் தடுக்க வழி இல்லையா?

- கே.ஜெயச்சந்திரன், எண்ணூர்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கடைகளில் வாங்கக் கூடாது. கறுப்புப் பணம் என்று தனியாக ஏதும் இல்லை. கணக்கில் காட்டப்படாத பணம்தான் கறுப்புப் பணம். இதுவரை கணக்கில் காட்டாத பணம் ஏதும் இருந்தால், அதை வங்கியில் செலுத்தலாம். நீங்கள் சொல்லும் பெரிய கடைக்காரர்கள் அதைத்தான் செய்கிறார்கள் என்றால் அது அரசின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி தான்.

ஓய்வுபெற்ற ஆசிரியையான எனது அக்கா, வங்கியில் ரூ.10 லட்சம் சேமிப்பு வைத்திருந் தார். நிலம் வாங்குவதற்காக அதை கடந்த மாதம் திருப்பி எடுத்துவிட்டார். ஆனால், நிலம் வாங்கவில்லை. திரும்பவும் வங்கியில் செலுத்தப் பட்ட அந்த பணத்துக்கு கேள்வி வருமா?

- அன்புச்செழியன், திருச்சி

எந்தப் பிரச்சினையும் இருக்காது. ரூ.10 லட்சம் வந்ததற்கான வழியை வருமான வரித் துறையினர் கேட்டால் காண்பிக்க வேண்டும். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள்தான் பயப்பட வேண்டும். சாமானியர்கள் அச்சப்படத் தேவையில்லை.

ரூபாய் 49,800-க்கு நகை அடகு வைத்துள் ளேன். எனக்கு வங்கியில் கணக்கு இல்லை. மகனுக்கு இருக்கிறது. சீக்கிரம் நகையை திருப்பச் சொல்கிறார்கள். ஆனால், என் வங்கிக் கணக்கு மூலமாக மட்டுமே நகையை திருப்ப முடியும் என்கின்றனர். இதற்கு மாற்று வழி என்ன?

- பெயர் குறிப்பிடாத வாசகர்

உங்கள் மகன் கணக்கிலேயே உங்களையும் இணைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், உங்கள் மகனின் கணக்கில் பணத்தை செலுத்தி அவரது காசோலை மூலமாக நகையை மீட்கலாம்.

ஓய்வுபெற்ற ஆசிரியரான நான் கடந்த மே மாதம் ரூ.13.5 லட்சத்துக்கு நிலம் விற் றேன். அதில் செலவு போக என்னிடம் ரூ.11 லட்சம் உள்ளது. வெளிநாடு சென்றுவிட்டு இப்போது தான் ஊருக்கு வந்தேன். வரி செலுத்தி அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 200 சதவீத அபராதம் விதிப்பார்களா?

- குணசேகரன், தஞ்சாவூர்

நீங்கள் குறிப்பிடும் ரூ.13.5 லட்சமும் பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையாக இருந்தால், அதை வங்கியில் செலுத்தலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. பின்னால் வருமான வரித் துறையினர் கேட்டால், இந்தப் பணம் எப்படி வந்தது என்று விளக்கினால் போதும். அப்படி இல்லாமல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்குக் கூடுதலான தொகையாக இருந்தால் கேள்வி வரும்.

வங்கியில் கல்விக் கடன் வாங்கியுள்ளேன். அதை அடைக்க, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தலாமா?

- சாந்தி, தருமபுரி

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் உங்கள் வசம் இருந்தால் அதை உங்களது சேமிப்புக் கணக்கில் செலுத்தி அதில் இருந்து தாராளமாக கல்விக் கடனை அடைக்கலாம்.

என் மகளுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் 4,98,450 ரூபாயை காசோலையாக செலுத்துமாறு கூறியுள்ளனர். இந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாமா?

- பெயர் குறிப்பிடாத வாசகர்

எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வங்கிக் கணக்கில் செலுத்தி அதில் இருந்து காசோலையை வழங்கலாம். அதுதான் பாதுகாப்பானதும் கூட. உங்களது டெபாசிட் தொகை வருமான வரி உச்சவரம்பை தாண்டினால் பின்னாளில், வருமான வரித் துறை கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்பார்களே என்று பயப்பட வேண்டியதில்லை. அதற்கு உரிய பதிலை நீங்கள் சொல்லிவிட்டால் போதும்.

வங்கியில் பணம் மாற்றும்போது நாம் கொடுக்கும் ஆதார் அட்டை நகலை வங்கி ஊழியர்கள் ஜெராக்ஸ் எடுத்து மறுபடியும் பணம் மாற்றுவார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. உண்மையில் அப்படி பணத்தை மாற்ற முடியுமா?

- மகேஷ் மருதாச்சலம், பொள்ளாச்சி

எல்லா இடத்திலும் ஓட்டைகள் இருக்கத்தான் செய்யும். எனினும், ஆதார் அட்டையின் ஒரிஜினலை காட்டினால் போதும். நகல் கொடுக்க வேண்டியது இல்லை என இப்போது அறிவிப்பு வந்திருக்கிறது. எனவே, இனிமேல் வங்கிகளில் ஆதார் அட்டை நகல் கேட்கமாட்டார்கள். மீறி எந்த வங்கியிலாவது ஆதார் அட்டை நகல் கேட்டால் ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்யலாம். யாருக்கு புகார் செய்ய வேண்டும் என்ற விவரமும் வங்கி வளாகத்திலேயே எழுதி வைக்கப்பட்டிருக்கும்.

சில வங்கி அதிகாரிகள், மேலாளர்கள் கமிஷனுக்கு பணம் மாற்றுவதாக தகவல்கள் வருகின்றன. இதற்கான வாய்ப்புகள் உண்டா? அவர்களை வருமான வரித் துறையினர் எப்படி கண்டறிவார்கள். அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்?

- பெயர் குறிப்பிடாத வாசகர்

எனக்குத் தெரிந்து 90 சதவீத வங்கி ஊழியர்கள் ராப்பகலாக உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். யாரோ சிலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தக் கூடாது. எல்லாவற்றையும் அரசாங்கம் கண்காணித்துக்கொண்டு இருக்க முடியாது. அரசின் கறுப்புப் பண ஒழிப்புப் போரில் மக்கள்தான் படை வீரர்கள். நீங்கள் சொல்வது போன்ற தகவல்கள் எங்காவது நடந்தால் அதுகுறித்து உடனடியாக அரசுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும். இதற்காகத்தான் ‘நமோ ஆப்ஸ்’ உள்ளது. இதைப் பயன்படுத்தி அலைபேசி மூலமாகவே நீங்கள் புகார்களை அனுப்பலாம். ‘நமோ ஆப்ஸில்’ வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நான் இமாமாக உள்ளேன். இஸ்லாமிய சட்டத்தில் ஒருவருடைய சம்பாத்தியத்தில் செலவு, கடன் போக மீதமுள்ள பணத்தில் 40-ல் ஒரு பங்கை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். முஸ்லிம் சட்டத்தை பயன்படுத்தி அந்த சலுகையை இப்போது பெற்றுக்கொள்ளலாமா?

- எம்.கே.முகமது ரபீக், மதுரை

வருமான வரித் துறையில் முஸ்லிம்களுக்கு என்று தனியான சட்டம் எதுவும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான சட்டம்தான். நீங்கள் நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்துக்கு முறையாக வரி செலுத்திவிட்டு, உங்களது மத கோட்பாட்டின்படி தாராளமாக ஏழைகளுக்கு உதவலாம். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in