வேலை கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது: கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக திருவள்ளூர் போலீஸார் செயல்படுவதா? - இரா.முத்தரசன் கண்டனம்

வேலை கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது: கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக திருவள்ளூர் போலீஸார் செயல்படுவதா? - இரா.முத்தரசன் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் வேலை வழங்காததால், நிறுவனத்துக்காக வழங்கிய நிலத்தைத் திரும்பத் தரக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்ததற்காக திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்தூரில், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கார் தொழிற்சாலையை தொடங்குவதற்காக ‌அதிகத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் இருந்து விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு ஈடாக உள்ளூர் மக்களுக்கு பெரும் போராட்டத்துக்குப் பிறகு வேலை வழங்கியது.

இந்நிலையில், இந்நிறுவனம் தனது தொழிற்சாலையை பிசிஏ என்ற பிரான்ஸ் நிறுவனத்துக்கு நிலத்தோடு விற்றுவிட்டது. தொடர்ந்து அங்கு பணியாற்றிய உள்ளூர் மக்கள் 160-க்கும் மேற்பட்டோரின் வேலையைப் பறித்து, வெளியூர் மற்றும் வெளிமாநில ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. 4 ஆண்டுகளாக போராடியும் உள்ளூர் மக்களில் ஒருவருக்கு கூட வேலை தர பிசிஏ நிர்வாகம் மறுக்கிறது.

இதனால், நிலத்தை திரும்பக் தரக்கோரி தொழிலாளர்களும் குடும்பத்தினரும் தொழிற்சாலைக்கு முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன் மற்றும் 15 பெண்கள் உட்பட 66 பேரை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு காவல்துறை கைது செய்துள்ளது. பிணையில் வர இயலாத வகையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கூறும் ஆலோசனைகள் பரிந்துரைகள் எதையும் கேட்க மறுத்து நடந்து கொள்ளும் பிரான்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு அப்பட்டமாக ஆதரவாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை செயல்படுகிறது.

விவசாய நிலத்தையும் வேலையையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவுவதற்கு பதில் கடும் குற்றங்களைச் செய்ததுபோல கைது செய்து சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற கொடூர செயல். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.

கைதான அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர்கள், விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in