Last Updated : 28 Sep, 2022 08:04 AM

 

Published : 28 Sep 2022 08:04 AM
Last Updated : 28 Sep 2022 08:04 AM

எழும்பூர் ரயில் நிலையத்தில் பெரும்பாலான நேரங்களில் - நகராமல் ஓய்வு எடுக்கும் ‘நகரும் படிக்கட்டு'களால் மக்கள் அவதி

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு செல்லும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு செயல்படாததால், அதன் வழியாக நடந்தவாறே இறங்கும் பயணி.

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டுகள் பெரும்பாலான நேரங்களில் ‘நகராமல்’ ஓய்வு எடுக்கின்றன. இதனால் முதியோர் உள்ளிட்ட பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தினசரி 30-க்கும் மேற்பட்டவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல், கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு இடையே தினசரி 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்துதான் புறப்படுகின்றன. இதன் காரணமாக, அதிகாலை முதல் நள்ளிரவு வரை எழும்பூர் ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்படும். இங்குள்ள நடைமேடைகளுக்குச் செல்ல வசதியாக, நகரும் படிக்கட்டு, மின்தூக்கிகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாகவே கோரிக்கை வைத்தனர்.

அதையேற்று, காந்தி இர்வின் சாலையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை செல்ல வசதியாக ரூ.1.6 கோடி மதிப்பில் இரட்டை நகரும் படிக்கட்டு கடந்த ஆண்டு ஜூலையில் அமைக்கப்பட்டது. இதுதவிர, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நுழையும் பகுதியில் ஒரு பிரம்மாண்ட நகரும் படிக்கட்டும் அமைக்கப்பட்டது. அதேபோல், மின்சார ரயில்களில் பயணிப்போரின் வசதிக்காக, 10 மற்றும் 11-வது நடைமேடையில் ஒரு நகரும் படிக்கட்டு நிறுவப்பட்டது.

ஆனால், இந்த நகரும் படிக்கட்டுகள் பெரும்பாலான நேரங்களில் நகராமலேயே உள்ளன. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். காந்தி இர்வின் சாலையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடைகளுக்குச் செல்ல அமைக்கப்பட்ட இரட்டை நகரும் படிக்கட்டுகள் காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் செயல்படாமல் உள்ளதாகவும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு வருவதற்கான படிக்கட்டு எப்போதுமே செயல்படுவதில்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கபிலன் என்பவர் கூறும்போது, “பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரும் வழியில் உள்ள நகரும்படிக்கட்டு மற்றும் 11-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டு எப்போதுமே செயல்படுவதில்லை. இதுபோல, போதியமின்தூக்கி வசதியும் இல்லை. இதனால், முதியோர் உள்ளிட்ட பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

எனவே, இந்தப் பிரச்சினையை தீர்க்க ரயில்வே நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்" என்றார். மின்தூக்கி வசதி வேண்டும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிம்மச்சந்திரன் கூறும்போது, ‘‘எழும்பூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளி பயணிகள் வந்துசெல்ல வசதியாக, மின்தூக்கி வசதிகள் எல்லா நடைமேடைகளிலும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஒருசில இடங்களில் மட்டும் மின்தூக்கி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், போதிய பேட்டரி கார்வசதியும் இல்லை. இதனால், மாற்றுத் திறனாளி பயணிகள் சிரமப்படுகின்றனர்’’ என்றார். இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, "பூந்தமல்லி சாலையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நுழையும் பகுதியில் உள்ள நகரும் படிக்கட்டு, 10, 11-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டு ஆகியவற்றை குஜராத்தை சேர்ந்த ஒமேகா நிறுவனம் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திடம் தகவல் தெரிவித்து, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இதுபோல, மற்ற இடங்களில் உள்ள நகரும் படிக்கட்டுகளும் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x