Published : 28 Sep 2022 07:30 AM
Last Updated : 28 Sep 2022 07:30 AM

திருச்சி, சிதம்பரம், மதுரையில் ரூ.6.57 கோடியில் சுற்றுலாத் துறை சார்பில் அலுவலகம், தங்கும் விடுதி: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சுற்றுலாத் துறை, சார்பில் ரூ.6.57 கோடியில் கட்டப்பட்டுள்ள சுற்றுலாத் துறை கட்டிடங்கள், தங்கும் விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாகத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

சுற்றுலா அலுவலகம்: அந்த வகையில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு ஒட்டலில் ரூ.4 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் செலவில் 19,238 சதுர அடி பரப்பில் தங்கும் விடுதி மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், 110 பேர் அமரும் வகையில் தொழில் கூட்டங்கள் நடத்துவதற்கான கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரத்தில் புதிய சுற்றுலா அலுவலகக் கட்டிடம் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் இந்த அலுவலகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.

இதுதவிர, மதுரை, கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா தர்கா மற்றும் மஸ்ஜித் வக்ஃப் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதத் தலமாகும். இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழாவுக்கு அதிகளவில் உள்ளூர் மக்களும், சுற்றுலாப்பயணிகளும் வருகை புரிகின்றனர்.

ஓய்வுக் கூடங்கள்: இத்த தர்காவுக்கு வரும் புனித யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில் ரூ.1 கோடியே 80 லட்சத்து 21 ஆயிரம் செலவில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வுக் கூடங்கள், பொருட்கள் வைப்பறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் ஆகிய கூடுதல் வசதிகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

காணொலி வாயிலாக.. இக்கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலாத் துறைச் செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x