

''பண மதிப்பு நீக்க பிரச்சினையில் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என பிரதமர் நினைக்கிறார். அவர்கள் ஒரு கட்டத்தில் ஆயுதம் எந்த வேண்டிய சூழலை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும்'' என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க அறிவிப்பினை கண்டித்து திமுக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:
கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும், தீவிரவாதிகளுக்கு பணம் செல்வதைத் தடுக்க வேண்டும், கள்ள நோட்டுகளைக் கண்டறிய வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருப்பினும், அதனை செயல்படுத்திய விதம் தவறானதாக உள்ளது. கிடா விருந்தில் விஷம் வைத்தது போல ஆகிவிட்டது. கடந்த 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானது. அதன் பின் 20 நாட்களாகியும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் பணத்தை எடுக்க வேண்டிய அவல நிலைக்கு மத்திய அரசுதான் காரணம்.
பிரதமர் மோடி டீக்கடையில் வேலை செய்தவர் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவருக்கு சாமானிய மக்களின் கஷ்டம் தெரிந்திருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் பார்லிமென்டில் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அதற்கு பதில் சொல்ல பிரதமர் அவைக்கு வரவில்லை. பண மதிப்பு நீக்க அறிவிப்பு செய்த அடுத்த நாளிலேயே, பிரதமர் ஜப்பானுக்கு சென்று விட்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இந்த திட்டத்தில் பிரதமரை அவர் பாராட்டுகிறார். பாஜகவை அவர் முடித்துக்கட்ட திட்டமிட்டுவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது. ராகுல்காந்தி வரிசையில் நின்று பணம் எடுத்ததை, நடிப்பு என பிரதமர் கூறும் நிலையில், பிரதமரின் தாயார் எதற்காக வரிசையில் நின்றார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
பணம் மதிப்பு நீக்கத்தால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழகம் முடங்கிப்போய் உள்ளது. பண மதிப்பு நீக்க பிரச் சினையில் மக்களுக்கு உதவ, தமிழக அரசு தயாராக இல்லை. இது பற்றி கருத்துக்கூட கூறவில்லை.
பண மதிப்பு நீக்க பிரச்சினையில் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என நினைக்காதீர்கள். இந்த பாதிப்பு பெரும் போராட்டமாக வெடிக்கவுள்ளது. ஒரு கட்டத்தில் ஆயுதம் எந்த வேண்டிய சூழலை பிரதமர் ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் முத்துசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். .