Published : 30 Nov 2016 12:18 PM
Last Updated : 30 Nov 2016 12:18 PM

போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளத்தில் ரொக்கமாக ரூ.3,000 விநியோகம்

ரூபாய் நோட்டுப் பற்றாக்குறை முழுமையாக சீரடையாத காரணத்தால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளத்தில் ரூ.3000 ரொக்கமாக வழங்கப்படுகிறது.

சென்னை, பல்லவன் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) முதல் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளத்தில் ரூ.3 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பிரிவு அலுவலர்கள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு வங்கிகள் மூலம் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ரூபாய் நோட்டுப் பற்றாக்குறை:

இந்நிலையில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்த பிறகு, மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளது. பணம் இல்லாத காரணத்தால் பெரும்பாலான ஏடிஎம்கள் மூடிக் கிடக்கின்றன.

இந்தச் சூழலில், மாத சம்பளத்தை வங்கிகளில் செலுத்தினால் ஊழியர்கள் அதை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். அது மட்டுமின்றி சம்பளப் பணத்தை எடுப்பதற்காக வங்கி அல்லது ஏடிஎம்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.

எனவே, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

போக்குவரத்துத் துறை ஊழியர்களும் இதே கோரிக்கையை முன்வைத்தனர். இதுகுறித்து தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்கள் போக்குவரத்து நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தன.

ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு:

இந்நிலையில், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது.

அதில், போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான தொகையை ரொக்கமாக வழங்குவது எனவும், மீதித் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 3 நாட்களாக பயணிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகை ரொக்கமாக இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

அதிலிருந்து தற்போது ஊழியர்களுக்கு சம்பளத்தில் தலா ரூ.3000 ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x