Last Updated : 27 Sep, 2022 05:46 PM

7  

Published : 27 Sep 2022 05:46 PM
Last Updated : 27 Sep 2022 05:46 PM

“பாஜக வளர்வதைக் கண்டு பொறுக்க மாட்டாமல்...” - முதல்வர் ஸ்டாலின் மீது வானதி விமர்சனம்

வானதி சீனிவாசன் | கோப்புப் படம்

கோவை: "தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு சக்தி, தமிழகத்தில் திமுகதான். குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள்" என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினரின் வீடு, அலுவலகங்களில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக, தமிழகம் முழுவதும் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள், கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதற்கு முதல்வர் முக ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும்.

பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.அதன் அடிப்படையில் 15-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்க முடியாது. ஆனாலும், இது குறித்தெல்லாம் கண்டிக்காமல், முக ஸ்டாலின் நேற்று (செப்.26) வெளியிட்ட அறிக்கையில், "திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சில அரசியல் சக்திகள் பாடுபட்டு கொண்டிருக்கின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் நம் பயணத்தை தொடர வேண்டும்” என்று முதல்வர் கூறியுள்ளார்.

தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு சக்தி, தமிழகத்தில் திமுகதான். குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள். தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் என்பது அனைவருக்கும் தெரியும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கூட ஆபாசமாக விமர்சித்தவர்கள் திமுக தலைவர்கள்.

தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு மரமாக வளர்ந்துள்ள திமுகவை, வளர்ச்சி, தேச ஒற்றுமை என்கிற கோடரி கொண்டு பாஜக வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே, பாஜக வளர்வதை கண்டு பொறுக்க மாட்டாமல், வீண் ஜம்பம் அடிப்பதை விட்டுவிட்டு, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற உறுதியுடன் நடவடிக்கை எடுங்கள். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து, இந்த வன்முறை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறையை பயன்படுத்துங்கள். இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x