

சென்னை: "சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஓபிஎஸ் மட்டும் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? ஜேசிடி பிரபாகர் அறிக்கையை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் வீட்டிற்கு செல்ல ஏன் பயப்படுகிறீர்கள்? திமுகவோடு ஓபிஎஸ் கைகோத்துவிட்டார் என்பதைத்தானே இது காட்டுகிறது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் மீட்டுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கொள்ளையடித்து சொத்துகளை சூறையாடியது ஊடகங்களில் வெளிவந்தது. இதுதொடர்பாக ஜேசிடி பிரபாகர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்துப் பார்த்தால், அந்த ஆவணங்கள் எல்லாம் ஓபிஎஸ் வீட்டில்தான் உள்ளது. அப்படியிருக்கும்போது, ஓபிஎஸ் வீட்டிற்கு ஏன் போலீஸ் செல்லவில்லை? ஓபிஎஸ்ஸும் போலீஸாரும் கைகோத்துள்ளனர். ஓபிஎஸ்ஸும் திமுகவும் கைகோத்துவிட்டனர்.
ஏதோ ஒரு டம்மி பீஸ் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர் வீட்டில் இருந்து ஆவணங்களை எடுத்ததுபோல கணக்கு காட்டுகின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஓபிஎஸ் மட்டும் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? ஜேசிடி பிரபாகர் அறிக்கையை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் வீட்டிற்கு செல்ல ஏன் பயப்படுகிறீர்கள்? ஓபிஎஸ் திமுகவோடு கைகோத்துவிட்டார் என்பதைத்தான் இது காட்டுகிறது" என்று கூறினார்.
முன்னதாக, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதலின்போது காணாமல் போனதாக கூறப்பட்ட 113 ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டுள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரிடமிருந்த இந்த ஆவணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்திருந்தனர்.