

மதுரை: ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்தாலும், அவை வெவ்வேறு பெயர்களில் வருவதால் முழுமையாகத் தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது என உயர் நீதிமன்றக் கிளை வேதனை தெரிவித்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என் மகள் இதாஸ் செலானி வில்சன் (19). நாகர்கோவில் பெண்கள் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்தார். செப்.6-ம் தேதி முதல் என் மகள் காணவில்லை. கன்னியாகுமரி சவேரியார்புரம் சுனாமி காலனியைச் ஜெப்ரின் என் மகளை கடத்தியுள்ளார். மகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மகளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். அதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், இளம் பெண்ணை கடத்தியதாக கூறப்பட்ட நபர், இளம்பெண்ணை மேலும் தொந்தரவு செய்யக் கூடாது. மீறினால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் மேலும் கூறுகையில், “இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் உள்ளனர். தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையங்களில் அந்த விளையாட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. ஃபிரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகளெல்லாம் வருகிறது. இவை குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுகிறது” என கருத்து தெரிவித்தனர்.