Published : 27 Sep 2022 12:09 PM
Last Updated : 27 Sep 2022 12:09 PM

அதிமுக ஆட்சியில் 15.20 லட்சம் பேர் நீக்கம்: ஓய்வூதிய பயனாளிகள் குறித்த ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் பதில்

கோப்புப் படம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்

சென்னை: அதிமுக ஆட்சியில் ஓய்வூதிய பயனாளிகள் 15.20 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதில் அளித்துள்ளார்.

முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டதாக, மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், தமிழ்நாடு முன்னாள் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசை குறைகூறி, நல்ல பெயரை எடுக்க முயற்சிக்கும் அவருடைய நோக்கம் எடுபடாது. சமூகப் பாதுகாப்புத் திட்ட நடைமுறைகளை நன்கு அறிந்திருந்தும், தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றும், தற்போது ஓய்வூதியம் பெறும் அனைத்துப் பயனாளிகளும் தொடர்ந்து ஓய்வூதியம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், இரண்டு ஓய்வூதியம் பெறுபவர்கள், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் போன்றவர்களைக் கண்டறிந்து, பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கிவருவது தொடர்ந்து நடைபெற்றுவரும் வழக்கமான நடைமுறை ஆகும். இந்த அரசை குறைகூறும் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சராக இருந்தபோது, கடந்த அஇஅதிமுக ஆட்சியில் 2014-2015ல் மட்டும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெற்றுவந்த 4.38 இலட்சம் பயனாளிகள் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2015-16 முதல் 2020-21ம் ஆண்டு வரை, 10.82 இலட்சம் பயனாளிகள் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் அஇஅதிமுக ஆட்சியின் 7 ஆண்டுகளில், 15.20 இலட்சம் நபர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட போது, குறைகள் ஏதும் சொல்லாமல் இருந்த ஓ. பன்னீர்செல்வம் தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் இறந்தவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது சரியென்று சொல்லுகிறாரா? இந்த அரசின் செயல்பாடுகளில் குறைசொல்ல எதுவும் இல்லாத காரணத்தினால், இல்லாத ஒன்றை குறையாக தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ்நாட்டில், "திராவிட மாடல்" ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதலமைச்சர் , தகுதியுள்ள அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென ஆணையிட்டுள்ளார். இதன்படி, கடந்த ஆண்டில் மட்டுமே 4 லட்சத்து 92 ஆயிரம் நபர்களுக்கு புதியதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அஇஅதிமுக ஆட்சியின் கீழ் 2020-21ம் ஆண்டில் 2.57 லட்சம் நபர்களுக்கு மட்டுமே புதியதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மேலும், அஇஅதிமுக ஆட்சியில், 2020-2021ம் ஆண்டில், ஓய்வூதியம் வழங்கிட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.4,306 கோடியினை உயர்த்தி 2022-23ம் ஆண்டில் ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களே போதும், ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என தெரியவரும். இருப்பினும், பொதுமக்களின் தகவலுக்காக பின்வரும் சரியான விவரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வருவாய்த்துறையின் வழக்கமான கள ஆய்வுகளின்போது, பல்வேறு சமூக நல பாதுகாப்பு திட்டங்களின்கீழ், ஓய்வூதியம், உதவித்தொகை பெற்றுவருபவர்களில், இறந்தவர்கள், இரண்டு ஓய்வூதியங்கள் பெறுபவர்கள், அரசு பணியில் இருந்துகொண்டு உதவித்தொகை பெறுபவர்கள், அரசு பணியில் ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியத் தொகையும் முதியோர் ஓய்வூதியமும் பெறுபவர்கள், வறுமைக்கோட்டிற்குமேல் உள்ளவர்கள் ஆகியோர்களை கண்டறிந்து நீக்கிவிட்டு, தகுதியானவர்களை இத்திட்டத்தின்கீழ் சேர்க்கும் பணி, தொடர்ச்சியாக நடைபெறும் பணியாகும். இதனால் தகுதி வாய்ந்த நபர்கள் விடுதலின்றி பயன்பெறுவது என்பது உறுதி செய்யப்படுகிறது. மக்களின் வரிப்பணம் தேவையான ஏழை எளிய மக்களுக்காக செலவு செய்யப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. இதுதான் சமூக பொருளாதார நீதியும் ஆகும்.

சமூகப் பாதுகாப்புத் திட்ட விதிகளின்படி, தகுதியற்ற நபர்கள் மட்டுமே கள ஆய்வு பணியின் முடிவுகளின்படி நீக்கப்பட்டுள்ளனர். மேலும், தகுதியானவர் எவருக்கும் இல்லையென சொல்லாமல் வழங்கும் நமது முதல்வர் , சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர்களும் தாங்கள் தவறாக நீக்கப்பட்டதாக கருதினால், அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யவும், அதனை, மறு கள ஆய்வு செய்து விதிகளின்படி தகுதியிருப்பின், அவர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கிடவும் அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கான வழிமுறைகளும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துத் துறையின் வளர்ச்சி, அனைத்து வகை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற "திராவிட மாடல் ஆட்சி" சிறப்பாக நடந்துவரும் தமிழ்நாட்டில் 'சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, அனைத்து தகுதி வாய்ந்த நபர்களும் விடுதலின்றி பயன்பெறுவதை இந்த அரசு உறுதி செய்யும்' என்ற முதல்வரின் உத்தரவினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x