

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான ஆம்னி பேருந்து மீது மர்ம நபர்கள் இரவில் பெட்ரோல் குண்டு வீசினர். பேருந்து மீது விழாமல் அது தரையில் விழுந்து தீப்பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் விவேகம் ஜி. ரமேஷ், பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவர். இவர், சொந்தமாக ஆம்னி பேருந்துகளை வைத்து சென்னை, கோவைஉள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கி வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு ஆம்னி பேருந்துதூத்துக்குடியில் இருந்து கோவைசெல்வதற்காக நேற்று முன்தினம்இரவு 10.25 மணியளவில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
அலறியடித்து இறங்கிய பயணிகள்: அப்போது அருகேயுள்ள மேம்பாலத்தின் மேலே இருந்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை பேருந்தை நோக்கி வீசினர். பேருந்து அருகே சாலையில் விழுந்து அந்த பெட்ரோல் குண்டு தீபிடித்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும்ரமேஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்தனர். பெட்ரோல்குண்டு பேருந்து மீது விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் பயணிகளுடன் பேருந்து கோவைக்கு புறப்பட்டுச் சென்றது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருநெல்வேலி சரகடிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்தபகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.சித்ராங்கதன் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.