

மதுரை: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்பது வழக்கம். இந்த கலை நிகழ்ச்சிகளில்ஆபாசம் அதிகமாக இருப்பதால் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தசரா விழாவில் ஆபாசநடனங்கள், பாடல்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ஸ்ரீ அம்பிகை தசரா குழு செயலாளர் கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளால் தசரா நிகழ்வுகளில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தசரா விழாவில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகர், நடிகைகள் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம் குலசேகரன்பட்டினம் ஊருக்குள்ளேயும், வெளியேயும் ஆபாச நடனங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. உரிய அனுமதி பெற்ற பின்பே கலைநிகழ்ச்சியை நடத்த வேண்டும். ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். வீடியோ பதிவுக்கான கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோயில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். ஆபாச நடனங்கள், ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தினால் நிகழ்ச்சியை போலீஸார் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மீதுவழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.