

கோவையில் உள்ள தனியார் அறக்கட்டளை சார்பில், ‘என் கடமை பணி செய்து கிடப்பதே’ எனும் கருத்தரங்கம் திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமை வகித்தார். இதில் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ எனும் தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
இன்றைக்கு பலரும் ஆன்மிகத்தை, கடவுளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்கின்றனர். ஒளியின் வேகத்தை துல்லியமாக கணக்கிட முடிந்துள்ளது. நாம் ஒளியை கடவுளாக பார்க்கிறோம். அக்னி இல்லாமல், நமது குடும்பத்தில் எந்த நிகழ்வும் நடைபெறாது. இதை புரிந்துகொள்ளும் சக்தி விஞ்ஞானத்துக்கு இல்லை.
அறிவியலைவிட ஆன்மிகம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதலும், முடிவும், அழிவும் இல்லாதது சனாதன தர்மம். நமது வேலையை, செயலை நாம் துணிந்து செய்வதுதான் சனாதன தர்மம்.
பஞ்சபூதங்களின் வெளிப்பாடாக உள்ள கோயில்கள், தமிழகத்தில் சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயில்கள் 340-க்கும் மேல் உள்ளன. அக்கோயில்களை பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகமும், பழமையான தமிழக கோயில்களை மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து திருப்பூர் ஜெய் நகர் பகுதியில் கல் வீசி தாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிரபுவின் வீட்டுக்குச் சென்று அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகம் அமைதிப் பூங்காவாக மாற, காவல்துறை முழுஅதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும். தமிழக காவல்துறை தன்னுடைய நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும். உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்தால், அடுத்த குற்றம் நடைபெறுவது தடுக்கப்படும்’’ என்றார்.