

தமிழகம் முழுவதும் 1990 முதல் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சதுப்பு நிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரங்களின் ஆவணங்களைத் தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், சதுப்பு நிலங்களில் எக்காரணம் கொண்டும் பத்திரம் பதியக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத் தில் உள்ள 66.70 ஏக்கர் பரப்பை மோசடி ஆவணங்களின் மூலம் சிலர் பத்திரப்பதிவு செய்து ரூ. 66 கோடிக்கு விற்பனை செய்து வி்ட்டதாக தொடரப்பட்ட வழக்கில் லட்சுமணன், அழகிரி என்ற 2 பேர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது.
அப்போது இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:
சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பாக 2015-ம் ஆண்டு பல்வேறு உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ளது. இந்த மனுவைப் பொருத்தமட்டில் சதுப்பு நிலங்கள் மோசடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஊரக வளர்ச்சித்துறைச் செயலர், வருவாய் துறைச் செயலர், பத்திரப்பதிவு செயலர் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் என 21 பேரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் 1990 முதல் சதுப்புநில பகுதிகளில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை 12 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் பதிவுத்துறை ஐஜி தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சதுப்பு நிலங்களில் புதிதாக கட்டுமானம் மேற்கொள்ளவோ, பத்திரம் பதியவோ கூடாது. இதுதொடர்பாக அதிகாரிகள் தடை விதித்து அரசு சார்பில் விளம்பரம் வெளியிட வேண்டும். சதுப்பு நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு இருந்தால் அதுகுறித்து வரும் நவம்பர் 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பொருத்தமட்டில் அங்கு எந்தவித பத்திரப்பதிவும் ஆன்லைன் மூலமாகக்கூட செய்யக்கூடாது என அனைத்து சார் பதிவாளர்களுக்கும் சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.