Published : 27 Sep 2022 04:15 AM
Last Updated : 27 Sep 2022 04:15 AM

ஈரோடு | பணி அழுத்தத்தால் ஊராட்சி செயலாளர் மரணம்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்.

ஈரோடு

பணி அழுத்தத்தால் உயிரிழந்த ஊராட்சி செயலாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கருப்புப்பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த முத்தான் (45) என்பவர், இரு நாட்கள் முன்பு, அலுவலகத்தில் பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் இறந்ததாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் குற்றம் சாட்டியது.

இதையடுத்து, மறைந்த ஊராட்சி செயலாளர் முத்தான் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நேற்று பணியினை புறக்கணித்து, கருப்புப் பட்டை அணிந்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 225 ஊராட்சிகளின் செயலாளர்களும் நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் ஊராட்சி உதவி இயக்குநர்அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாஸ்கர்பாபு தலைமையில் உள்ளிருப்புப் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள் கூறியதாவது: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு தொடர்ந்து கூடுதல் பணி வழங்கப்படுவதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக ஊராட்சிச் செயலாளர் முத்தான் இறந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு அரசு நிதியுதவி செய்வதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தால், அனைத்து ஒன்றியங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. மாலையில் மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x