Published : 27 Sep 2022 06:41 AM
Last Updated : 27 Sep 2022 06:41 AM

சென்னை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வரைவு செயல்திட்ட பரிந்துரைகள் தமிழில் இன்று பதிவேற்றம்

சென்னை: சென்னை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வரைவு செயல் திட்டம், இன்று தமிழில் வெளியிடப்படுகிறது. சென்னை மாநகரம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் உயரத்துக்குள் உள்ளது. இதனால் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் இயற்கை பேரிடர்களால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் மாநகரமாக சென்னை உள்ளது. இதையடுத்து, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதற்கான சில பரிந்துரைகளை உருவாக்கி பொதுமக்களின் கருத்துகளை கேட்க முன்வந்துள்ளது. அந்த பரிந்துரைகளை அண்மையில் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருந்தது . அதை தமிழிலும் வெளியிட வேண்டும் என்றுசுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர்வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், வரைவு செயல் திட்ட பரிந்துரைகளை தமிழில் மாநகராட்சி இன்று வெளியிடுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரம் இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 5-வது மாநகரமாக உள்ளது. சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப, இயற்கை வளம்மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையிலும் காலநிலைக்கான செயல்திட்டத்தை தயாரிக்க சி40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் சென்னை இணைந்துள்ளது.

சி40 நகரங்களுக்கான கூட்டமைப்பு சார்பில் சென்னையில் காலநிலை செயல்திட்டத்தை தயாரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு செயல் திட்டம் குறித்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வரைவு செயல் திட்டப் பரிந்துரைகள், மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை chennaiclimateactionplan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். இதற்கான அவகாசம் அக்டோபர் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தபரிந்துரைகள் தமிழில் இன்று(செப்.27) பதிவேற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x