

சென்னை: சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் சென்னை மாநகரப் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை 7.30 மணி முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கிது. குறிப்பாக வட சென்னை, தென் சென்னையில் காலையில் மழை பெய்தது.
அதன் பின்னர் பகல் நேரத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் சுமார் 3.30 மணி அளவில் சென்னை, புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், பெரியமேடு, வேப்பேரி, பெரம்பூர், மாதவரம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, தியாகராயநகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 31 மிமீ, மீனம்பாக்கத்தில் 6 மிமீ மழை பதிவானது.