

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், வழித்தடங்களை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகர் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ சித்திக் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னைமெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்டத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது.
மாதவரம் - சிறுசேரி வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவில் 4-வது வழித்தடத்திலும், மாதவரம் -சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீதொலைவில் 5-வது வழித்தடத்திலும் என 118.9 கி.மீ. தொலைவில் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, இந்த வழித்தடங்களை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனைகளும் நடைபெறுகின்றன.
3 வழித்தடங்கள் நீட்டிப்பு: கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையுள்ள 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ.தொலைவுக்கு நீட்டிக்க ஆலோசிக்கப்படுகிறது. இதுதவிர, மாதவரம் -சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில், திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், அம்பத்தூர் வழியாக ஆவடி வரை 17 கி.மீ தொலைவுக்கு நீட்டிக்கவும் ஆலோசித்து வருகின்றனர். அதேபோல், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில், சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வரை நீடிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மதுரவாயல், நொளம்பூர், சின்மயா நகர், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோயம்பேடு வந்து, மெட்ரோ ரயில்களில் ஏறிச் செல்கின்றனர். அடுத்தகட்டமாக, திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், அம்பத்தூர் வழியாக ஆவடி வரை 17 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில்திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. அப்போது, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்.
இதுதவிர, சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் (சுமார் 8 கி.மீ) வரையும், பூந்தமல்லியில் இருந்து, புதிதாக விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ சித்திக் கூறும்போது, “இந்த மூன்று வழித்தடங்களின் நீட்டிப்பு தொடர்பாக விரிவான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்து பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்க விரைவில் ஆலோசகர் நியமிக்கப்படுவார். தற்போது, அதற்காக விளம்பரம் கொடுத்து உள்ளோம். விரிவான பொது திட்டம், தற்போதைய போக்குவரத்து வழிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றை ஆலோசகர் ஆய்வு செய்து, 3 மாதங்களில் அறிக்கையை அளிப்பார்” என்றார்.