Published : 27 Sep 2022 06:50 AM
Last Updated : 27 Sep 2022 06:50 AM
சென்னை: சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுஒருபுறம் இருக்க தற்போது, தமிழகத்தில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது.
இதேபோல் ஒரு அசம்பாவித சம்பவம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக 445 லாட்ஜூகளில் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள், ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்றும் அனுமதியின்றி மற்றும் விசா காலம் முடிந்து வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளனரா என்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு போலீஸார் அறிவுரை வழங்கினர்.
அதுமட்டும் அல்லாமல் நேற்று முன்தினம் இரவு சென்னையில் 98 முக்கிய இடங்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் அமைத்து சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர். இந்தசோதனையில், மது போதை, விதிமீறல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 52 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், நீதிமன்ற பிடியாணைபிறப்பிக்கப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை யாக 2 நபர்கள் மீதும், திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர்மீதும், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தது தொடர்பாக 2 வழக்குகளும், குட்கா விற்பனை செய்தது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சந்தேக நபர்கள் குறித்துஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT