

உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செய லாளர் க.அன்பழகன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசா ரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். ‘வழக்க மாக உட்கொள்ளும் மருந்துகள் ஒத்துக் கொள்ளாததால் ஒவ் வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கருணாநிதியை சந்திப்பதை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்’ என கடந்த அக்டோபர் 25-ம் தேதி திமுக தலைமை அலுவலகம் கேட்டுக் கொண்டது.
அதன்பிறகு குடும்பத்தினர் தவிர யாரும் அவரை சந்திக்க வில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் கருணாநிதியை அடிக்கடி சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் திமுக பொதுச்செயலாளர் அன் பழகன் நேற்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். இந்தச் சந்திப்பின்போது எடுக்கப் பட்ட படத்தை கருணாநிதி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு கருணாநிதியின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.
இது தொடர்பாக திமுக நிர் வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வாமை காரணமாக கருணா நிதியின் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்பட்டன. இத னால் அவரை யாரும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது.
தற்போது அவர் முழுமையாக குணமடைந் துள்ளார். விரைவில் அண்ணா அறிவாலயத்துக்கு வருவார். இனி கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்’’ என்றார்.