

சின்னமனூர் பாஜக நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் நேற்று அதிகாலை கல்வீசித் தாக்கி சேதப் படுத்தினர்.
தேனி மாவட்டம், சின்னமனூரில் கண்ணம்மாள் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பாஜக உள்ளாட்சி மேம்பாடு பிரிவு மாநிலச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி கிருஷ்ணவேணி சின்னமனூர் 12-வது வார்டு பாஜக கவுன்சிலர்.
பிரபாகரன் தனது வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை வாகனத்தின் 4 பக்கக் கண்ணாடிகளையும் மர்ம கும்பல் கற்களை வீசித் தாக்கி சேதப்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்த தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரை தாக்கிய கும்பலைத் தேடி வருகின்றனர்.
இது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் பாண்டியன் கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தார்.