

ஆட்சியாளர்கள் தங்களின் தவறுகளைத் திருத்திக் கொண்டு, வாகன உற்பத்தியில் தமிழகத்தை வளர்ச்சி நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவின் டெட்ராய்ட் என்று போற்றப்பட்ட சென்னை மாநகரம் படிப்படியாக அதன் பெருமையை இழந்து வருகிறது. ஒரு காலத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கனவு நகராக இருந்த சென்னை இப்போது வெறுப்பு நகரமாக மாறி வருகிறது. சென்னையில் செயல்பட்டு வரும் பல நிறுவனங்களும், புதிய நிறுவனங்களும் சென்னையில் தொழிற்சாலை அமைக்கும் முடிவை கைவிட்டு வெளியேறுகின்றன.
வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க சென்னை நகரம் மிகவும் ஏற்றது என்று உலகிற்கு உணர்த்திய நிறுவனம் ஃபோர்டு ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம் தான் தமிழகத்தில் முதன்முதலில் வாகன தொழிற்சாலை அமைத்த வெளிநாட்டு நிறுவனம் ஆகும். 20 ஆண்டுகளுக்கு முன் மறைமலைநகரில் இந்த ஆலை அமைந்த பிறகு தான் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் சென்னையில் ஆலை அமைத்தன.
இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெயரை சென்னை பெறுவதற்கு காரணமாக இருந்த இந்த நிறுவனமே, சென்னையில் ரூ.4000கோடி முதலீட்டில் இரண்டாவது கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, குஜராத் மாநிலத்தில் சென்று விட்டது. அதேபோல், ஜப்பானைச் சேர்ந்த இசுசு நிறுவனம் சென்னையில் ரூ.3000 கோடி செலவில் கார் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்திருந்தது.
ஆனால், திடீரென அத்திட்டத்தை கைவிட்ட இந்த நிறுவனம் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் அதன் தொழிற்சாலையை அமைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, திருவள்ளூரில் ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தில் கார்களை தயாரிப்பதையும் இந்நிறுவனம் நிறுத்தி விட்டது.
சென்னையில் ரூ.2400 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 18 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்திருந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும், அதன் முடிவை மாற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க ஆந்திர அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட டி.வி.எஸ் நிறுவனமும் அதன் இருசக்கர வாகன தொழிற்சாலையை ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நாயுடுபேட்டையில் அமைப்பதற்காக ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான தொழிற்சாலையை சென்னையில் அமைக்க திட்டமிட்டிருந்த பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டோம் நிறுவனமும் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்கு சென்று விட்டது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னைக்கு வரவிருந்த ரூ.60,000 கோடி முதலீடுகள் தமிழகத்தையொட்டி ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி பொருளாதார மண்டலத்திற்கு சென்றுள்ளன.
நாட்டின் தொழில்மயமான மாநிலங்களின் ஒன்றாக கருதப்படும் தமிழகத்தின் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் வாகன உற்பத்தித் துறையில் தமிழகம் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டில் தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை வெளியிடப்பட்ட போது, தமிழகத்தின் வாகன உற்பத்தியை 2020 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 50 லட்சம் வாகனங்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
தொழிற்கொள்கை வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஒரு வாகன உற்பத்தி தொழிற்சாலை கூட புதிதாக தொடங்கப்படவில்லை. 2014ஆம் ஆண்டில் தமிழகத்தின் கார் உற்பத்தித்திறன் ஆண்டுக்கு 13.80 லட்சம் அலகுகளாகவும், வணிகப் பயன்பாட்டுக்கான சரக்குந்து போன்ற கனரக வாகனங்களின் உற்பத்தித் திறன் 3.61 லட்சம் அலகுகளாகவும் இருந்தன. இரு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த எண்ணிக்கை மாறாமல் அதே அளவில் உள்ளது. ஆனால், தமிழகத்தின் போட்டியாளர்களாக குஜராத், ஹரியானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் கார் உற்பத்தி பெருமளவில் அதிகரித்திருக்கிறது.
வாகன உற்பத்தித் துறையில் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதற்கு காரணம் செயல்படாத அரசு தான் என்று தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நிலம், தொழிலாளர், கட்டமைப்பு வசதி, அரசின் ஆதரவு ஆகிய 4 அம்சங்கள் தான் வாகன நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க முக்கியக் காரணங்களாக இருந்தன. ஆனால், இந்த 4 அம்சங்களுமே தமிழகத்திற்கு சாதகமாக இல்லாமல் பாதகமாக மாறியிருக்கின்றன.
புதிய திட்டங்களுக்கு அரசின் ஆதரவு என்பது அடியோடு இல்லை. மற்ற மாநிலங்களில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கு உடனடியாக அனுமதி கிடைக்கும் நிலையில், தமிழகத்தில் இதுகுறித்த எந்த முடிவையும் முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியே தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நிலங்களோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல், ஆந்திராவில் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலம் வளர்ந்ததற்கு அங்குள்ள வசதிகள் காரணம் என்பதை விட, தமிழகத்தில் நிலவும் குழப்பங்கள் தான் காரணமாகும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். கும்மிடிப்பூண்டி பகுதியில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் பாலத் திட்டத்தை முடித்து துறைமுகத்திற்கு எளிதாக செல்ல வசதி ஏற்படுத்தித் தந்திருந்தால் ஸ்ரீசிட்டி வளர்ந்திருக்காது; மாறாக கும்மிடிபூண்டி மிகச்சிறந்த தொழில் மண்டலமாக மாறியிருக்கும் என்பதும் வல்லுநர்களின் கருத்து. இதை எவரும் மறுக்க முடியாது.
ஒருகாலத்தில் திறமையான தொழிலாளர்கள்தான் தமிழகத்தின் வலிமையாக இருந்தனர். ஆனால், இப்போது அதுவே பலவீனமாக மாறிவிட்டது. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் திறமையான பணியாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. மேலும், தமிழகத்தில் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுவதாலும், கைக்கெட்டும் தொலைவில் மது கிடைப்பதாலும் தமிழக தொழிலாளர்கள் மதுவுக்கும், சோம்பேறித் தனத்திற்கும் அடிமையாகி விட்டனர். இதனால் தமிழகத்தில் எந்த வாகன உற்பத்தி தொழிற்சாலையை எடுத்துக் கொண்டாலும் 75% பணியாளர்கள் பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று மனிதவள வட்டாரங்களை ஆதாரம் காட்டி ஒரு நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.
மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் தமிழகத்தின் வலிமையாக இருந்த 4 அம்சங்களும் இன்று பலவீனமாக மாறியிருப்பதற்கு ஆட்சியாளர்களின் தொலைநோக்குப் பார்வையின்மையும், ஊழலும், வாக்குவங்கி அரசியலுக்காக இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்தது தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
எனவே, ஆட்சியாளர்கள் தங்களின் தவறுகளைத் திருத்திக் கொண்டு, வாகன உற்பத்தியில் தமிழகத்தை முந்தைய நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.