

* கட்டிடம் மதியம் 2 மணிக்கே இடிக்கப்படும் என்ற தகவல் காரணமாக பொதுமக்கள் அந்த நிகழ்வை நேரில் காண்பதற்காக தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகள் உள்ளிட்ட உயரமான இடங் களில் உற்சாகத்துடன் நின்றனர். இடிக்கும் நேரம் தள்ளிப் போக போக அவர்கள் சோர்வடைந்தனர். அத்துடன், தாமதமாவதற்கான காரணம் சரியாக தெரியவில்லை என அவர்கள் ஒருவித பதற்றம் அடைந்தனர். அத்துடன், அப்பகுதி யில் மயான அமைதி நிலவியது.
* கட்டிடம் வெடி வைத்து தகர்க் கப்பட்டபோது கிளம்பிய புகை மண்டலம் அடங்க சில நிமிட நேரம் ஆனது. அத்துடன், 100 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் அந்த தூசி படர்ந்தது.
* நேற்று முன்தினம் முதல் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காட்சி அளித்தது.
* கட்டிடத்தை இடிக்கும்போது அக்கம் பக்கத்தில் தவறுதலாக யாருக்காவது அபாயம் ஏற்படக் கூடும் என்பதால் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்தன. அதேபோல், தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
* வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்ட பொதுமக்கள் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு அரசு சார்பில் உணவு அளிக்கப்பட்டது.
* கட்டிடம் இடிக்கப்படும் பகுதிக்கு நாய்கள் சென்றுவிடக்கூடும் என்பதால் ப்ளூ கிராஸ் ஆட்கள் நாய்களை பிடித்துச் சென்றனர்.
* 29 மாதங்களாக கட்டிடம் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் பறவைகள் கூடு கட்டியிருந்தன. கட்டிடம் இடிக்கப்பட்டபோது புறா, காகம் உள்ளிட்ட பறவைகள் பதற்றத்துடன் பறந்து சென்றன.
* கட்டிடம் இடிந்து கீழே விழுந்தபோது பூமி அதிர்ந்ததால் சிலர் கூச்சலிட்டனர். கட்டிடம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக சில விநாடிகளில் தரைமட்டமானதை பார்த்த பொதுமக்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
* கட்டிடம் வெற்றிகரமாக வெடி வைத்து தகர்க்கப்பட்டதையடுத்து, அதைத் தகர்த்த தனியார் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பொன்.லிங்கத்திடம் பொதுமக்கள் ஆட்டோகிராப் வாங்கினர்.
* கட்டிடம் பாதுகாப்பாக இடிக்கப் பட்டதை அறிந்து சிஎம்டிஏ அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், ஒருவருக்கொருவர் பாராட்டுகளை தெரிவித்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.