

திருச்சியில் 10 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.4 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகின. 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தந்தனர் என ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில், திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ‘‘திருச்சி எழுதப் போகும் புதிய வரலாறு’’ என்ற முழக்கத்துடன் செப்.16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்றது.
இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் 160 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், பல்வேறு பதிப்பகங்கள் மூலம் கதைகள், சிறுகதைகள், நாவல்கள், பாடப் புத்தகங்கள், போட்டித்தேர்வு புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என பல லட்சம் புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
அதுமட்டுமின்றி விடுதலைப் போர், கீழடி தொல்லியல் ஆய்வு, திருச்சி மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த அரங்குகள், கோளரங்கம், அறிவியல் கண்காட்சி, உணவகங்கள் என பன்முகத்தன்மையுடன் பிரத்யேக அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
அதிகப்படியான கல்வி நிறுவனங்களை கொண்ட திருச்சி மாவட்டத்தில், மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், புத்தகத் திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளை ஆசிரியர்களே பேருந்தில் அழைத்து வந்தனர்.
புத்தகத் திருவிழா குறித்து முன்னதாகவே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதால், மாணவர்கள் இதற்கென பணத்தை சேமித்துவைத்து புத்தகங்கள் வாங்கிச்சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பள்ளி மாணவர்களுக்கு எளிய கேள்விகள் கேட்டு, சரியான பதில் கூறுபவர்களுக்கு பேனா, பென்சில் போன்ற சிறிய பரிசுகள் வழங்கிய, இல்லம் தேடிக்கல்வி திட்டம் அரங்கு, அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கு ஆகியன மாணவர்களை வெகுவாக கவர்ந்தன.
அதேபோல திருச்சி மாவட்ட எழுத்தாளர்களுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கு, மாவட்டத்தில் உள்ள பல மூத்த எழுத்தாளர்களையும் வளர்ந்துவரும் புதிய எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்கும் கருவியாக திகழ்ந்தது.
மேலும், புத்தகத் திருவிழாவின்போது மாலை நேரங்களில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், தமிழகத்தின் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், எழுத்தாளர்களின் உரைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
குறிப்பாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்களை தேடிக்கண்டறிந்து தினந்தோறும் அவர்களை பாராட்டிச் சிறப்பிக்கும் நிகழ்வை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
புத்தகத் திருவிழா குறித்து ஆட்சியர் மா.பிரதீப்குமார் கூறும்போது, ‘‘புத்தகத் திருவிழாவை தொடங்கும்போது மக்கள் எப்படி வரவேற்பார்கள் என்ற ஐயம் இருந்தது.
ஆனால், திருச்சி மக்கள் இவ்வளவு சிறப்பாக ஆதரவு கொடுத்து இத்திருவிழாவை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த 10 நாள் திருவிழாவில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து ரூ.4 கோடி மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். வரும் ஆண்டுளில் புத்தகத் திருவிழா மேலும் சிறப்பாக நடத்தப்படும்’’ என்றார்.
புத்தகத் திருவிழாவில் ஒருசில குறைகளையும் சுட்டிக்காட்டிய பொதுமக்கள், ‘‘மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமான வசதி செய்யப்படாததால், அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
சில பதிப்பக அரங்கில் இருந்தவர்கள், பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களை விரட்டும் தொனியில் நடந்து கொண்டனர். அடுத்தமுறை இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தனர்.