Published : 29 Nov 2016 03:28 PM
Last Updated : 29 Nov 2016 03:28 PM

நவீனமயமாக்கும் திட்டங்கள்: வாசன் முன்வைக்கும் 10 கருத்துகள்

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவை நிலைநிறுத்தும் வகையில் மத்திய அரசு நவீனமயமாக்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வாசன் வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கும் 10 கருத்துகள்:

* உலகம் முழுவதும் நவீனமயமாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவையும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டியது நாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்களின் கடமை.

* நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு நவீனமயமாக்குதல் இன்றியமையாதது. அதே சமயம் நவீனமயமாக்கும் திட்டத்தினால் கிராமப்புற வளர்ச்சி தடைபடாமலும், வேலை பறிபோகாமலும் இருப்பதை அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 120 கோடி. இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற மக்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள். எனவே நம் நாட்டில் வாழும் பெரும்பாலான ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனை கவனத்தில் கொண்டு, அவர்கள் பாதிக்காத வண்ணம் நவீனமயமாக்கும் திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

* சமீபத்தில் உலக வங்கி நடத்திய ஆய்வின் அறிக்கையின் படி நவீனமயமாக்கும் திட்டத்தால் பெரிய தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது, சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலையில் இருப்பவர்களில் 69 சதவீதம் பேரை ஆட்குறைப்பு செய்யக்கூடிய கட்டாயச் சூழல் இந்தியாவில் உருவாகும்.

* இந்தியாவில் கட்டுமானம், தொழில் போன்ற பல்வேறு துறைகளில் அதிக முதலீடு செய்து நவீனப்படுத்தி, தரத்துடன் உற்பத்தியை பெருக்கி உலகத்தரம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போடும் வகையில் மிளிர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

* நம் நாட்டைப் பொறுத்தவரை மிக முக்கியமாக விவசாயத்தில் முன்னேற்றம் கண்டு, பொருளாதர வளர்ச்சிக்கு வித்திட வழி வகுத்து தர வேண்டும். மேலும் நம் நாட்டில் விவசாயத் தொழில் உட்பட அனைத்து தொழில்களிலும் நேரடியான மனித உழைப்பிற்கும், மனித வளத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* குறிப்பாக சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி, வேலை வாய்ப்பில் உறுதி போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் அந்தந்த மாநிலத்தில் மாவட்ட வாரியாக, நகரம் முதல் கிராமம் வரை ஆய்வு நடத்தி அந்தந்த பகுதிக்கு ஏற்ப தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுத்து, அதன் மூலம் மாநிலம் வளர்ச்சி அடையும் போது நாடும் முன்னேறும், நாட்டு மக்களும் முன்னேறுவார்கள்.

* குடிசைத் தொழிலை ஊக்குவித்து, கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நாடு முழுவதும் நிலவும் வறுமையை போக்கி, ஒவ்வொரு குடும்பத்தின் அன்றாட, அவசியத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை போதுமான அளவிற்கு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

* கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, வேலை வாய்ப்புக்கு உறுதி அளித்து, விவசாயம் உட்பட அனைத்து தொழில் துறையிலும் முன்னேற்றம் கண்டு, பொருளாதாரத்தை உயர்த்தி, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவையும் நிலைநிறுத்தும் வகையில் மத்திய அரசு நவீனமயமாக்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x