Last Updated : 27 Sep, 2022 03:01 AM

2  

Published : 27 Sep 2022 03:01 AM
Last Updated : 27 Sep 2022 03:01 AM

கோவை | பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு - காவல் ஆணையர் தகவல்

கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள முத்துசாமி சேர்வை வீதியைச் சேர்ந்தவர் தியாகு(35). இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். கடந்த 23-ம் தேதி இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்மநபர்கள் தீ வைத்தனர். இதில் கார் எரிந்து சேதமடைந்தது. அதேபோல், குனியமுத்தூரில் உள்ள ஞானபுரத்தை அடுத்த சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பாஜக பிரமுகர். கடந்த 23-ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். பெட்ரோல் குண்டு வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் மீது விழுந்து தீ்ப்பிடித்தது. இதில் கார் எரிந்து சேதமடைந்தது. மேற்கண்ட இரு வழக்குகள் தொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையின் இறுதியில், மேற்கண்ட பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் காருக்கு தீ வைப்பு வழக்கில் ஈடுபட்டவர்கள் மதுக்கரை அறிவொளி நகரைச் சேர்ந்த ஜேசுராஜ்(33), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இலியாஸ்(38) ஆகியோர் எனத் தெரிந்தது. இவர்கள் இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பாளர்களாக உள்ளனர். இதையடுத்து குனியமுத்தூர் காவல்துறையினர், கடந்த 25-ம் தேதி (நேற்று) மேற்கண்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மேற்கண்ட இருவரிடமும் , பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற வேண்டியுள்ளது. இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘குனியமுத்தூரில் நடந்த அசம்பாவித சம்பவம் தொடர்பான இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநகரில் இதுபோன்ற 6 வழக்குகளும், ஒரு பேருந்து கண்ணாடி உடைப்பு வழக்கும் உள்ளது. கூடிய விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையினர் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x