

“ஊழல் தடுப்பு கண்காணிப்பு முறையை சிறப்பாக செயல்படுத் தும் அரசு துறைகளில் ஒன்றாக ரயில்வே உள்ளது’’ என ஊழல் தடுப்பு கண்காணிப்பு முன்னாள் ஆணையர் பி.சங்கர் கூறினார்.
தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று தொடங்கியது. அப்போது தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி தலைமையில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். பின்னர், ஜோரி பேசும்போது, ரயில்வேயில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அனைத்து நிலைகளிலும் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து விளக்கினார். மேலும், “ரயில்வே அதிகாரிகள் ஒவ் வொருவரும் ஊழல் தடுப்பு கண் காணிப்பு அதிகாரிகளாக செயல் பட்டு வருகின்றனர்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு முன்னாள் ஆணையர் பி.சங்கர், “ஊழல் தடுப்பு கண்காணிப்பு முறையை சிறப்பாக செயல்படுத்தும் அரசு துறைகளில் ஒன்றாக ரயில்வே உள்ளது. எல்லா விஷயங்களிலும் மக்கள் காட்டும் அவசரம்தான் ஊழல் தோன்றுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. அதேபோல், சட்டங்களை அறியாததும். மதிக்காததும் ஊழலுக்கு வழிவகுக்கின்றன. எனவே, அனைவரும் சட்டத்தை மதித்து நடந்தால் ஊழலற்ற சமூகத்தை ஏற்படுத்த முடியும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், ‘தீபாவளி’ என்ற விழிப்புணர்வு குறும்படம் திரை யிடப்பட்டது. மேலும், விவாதங்கள், வினாடி-வினா போட்டிகள் உள்ளிட் டவையும் நடைபெற்றன.