முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப்படம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப்படம்

மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளங்களே அரசுக்கு எமனாக மாறும்: ஜெயக்குமார்

Published on

சென்னை: "மழைநீர் கால்வாய் 1500 கி.மீ. போட்டதாக கூறுகின்றனர். பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இன்னும் அந்தப் பணிகள் முடியவில்லை. எழுதிவைத்துக் கொள்ளுங்கள், கண்டிப்பாக தோண்டப்பட்டுள்ள இந்தப் பள்ளங்களே இவர்களுக்கு எமனாக மாறிவிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், " தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு இந்த அரசை பற்றி பயம் இல்லை. அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால், தமிழகத்தில் கண்டிப்பாக அமைதி நிலவும். ஆனால், அந்தளவுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசுக்கு திராணி, தெம்பு, வக்கில்லை.

மக்கள் அரசிடம் எதிர்பார்ப்பது என்ன, அடிப்படை கட்டமைப்பு வசதி, சட்டம் ஒழுங்கு. வேலைக்கு சென்றால் வீட்டிற்கு அமைதியாக திரும்பு வரவேண்டும் என்பதைத்தான் மக்கள் அதிகம் விரும்புவது. ஆனால், இன்று அப்படியில்லை. நாளிதழ்களை எடுத்தால், ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செய்திகள் வருகின்றன. கோவை, மதுரை, கன்னியாகுமரி, சேலம் ஆகிய பகுதிகளில் வீசி, சென்னை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் அதிகாலையில் வீசப்பட்டுள்ளது. வெடிகுண்டு, கத்தி, கஞ்சா, சூதாட்ட கலாசாரங்கள் இன்று திமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் சென்னையில், ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய ஆட்கள் இல்லை. இதனால் அரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு 2 மணி நேரம் 3 மணி நேரம் ஆகிறது.

மழைநீர் கால்வாய் 1500 கி.மீ. போட்டதாக கூறுகின்றனர். பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இன்னும் அந்த பணிகள் முடியவில்லை. எழுதிவைத்துக் கொள்ளுங்கள், கண்டிப்பாக இவர்கள் தோண்டிய பள்ளங்களே இவர்களுக்கு எமனாக மாறிவிடும்" என்று அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in