Last Updated : 26 Sep, 2022 02:34 PM

 

Published : 26 Sep 2022 02:34 PM
Last Updated : 26 Sep 2022 02:34 PM

சுற்றுலா துறை பணிகளில் மத்திய அரசு அனுமதி கிடைப்பதில் தாமதம்: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: சுற்றுலாவுக்கு 2 ஆயிரம் அறைகள் தேவை. ஆனால், அனுமதி உடனடியாக கிடைப்பதில்லை. இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து கோப்பு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா என்ற நிலையுள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விமர்சித்துள்ளார்.

புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘சுற்றுலா ஒரு மறு சிந்தனை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடத்தப்பட்டது. கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த கருத்தரங்கை முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். எம்.பி செல்வகணபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியது: “அரசுக்கு பெருமளவு வருவாயை சுற்றுலா ஈட்டித் தருகிறது. வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவழைக்க திட்டங்கள் தீட்ட வேண்டும். புதுச்சேரியில் பல அழகிய கடற்கரை இருப்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. மூர்த்திகுப்பம், மணல்பட்டு பகுதியில் கடல்நீர் அழகாக காட்சியளிக்கும். இதை மேம்படுத்த வேண்டும். மணப்பட்டு பகுதியில் 150 ஏக்கர் நிலம் உள்ளது. இதை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்துதர வேண்டும். இப்போது அதிகமாக விடுதிகள் தேவைப்படுகிறது. 2 ஆயிரம் அறைகள் உடனடி தேவை என்ற நிலையில் புதுவை உள்ளது. இதை கட்ட தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்.

அதே நேரத்தில் அனுமதி உடனடியாக கிடைப்பதில்லை - இழுத்தடிப்பதாகவும் தொழில்தொடங்குவோர் கூறுகின்றனர். நல்லவாடு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் விடுதிகள் கட்டுவதற்கு 3, 4 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள். இன்றுவரை அவர்களால் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியவில்லை. விரைவான வளர்ச்சி பெறுவதற்கு அனுமதி வழங்குவது அவசியமான ஒன்று. மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா என்ற நிலை உள்ளது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மாநில வளர்ச்சி பெற சிலவற்றை தளர்த்தித்தர வேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x