பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களின் பின்னணியில் யார்? - சீமான் கருத்து

சீமான்
சீமான்
Updated on
1 min read

சென்னை: "பாஜகவினர் வீட்டில் குண்டு வீசப்பட்டது என்றவுடன் இஸ்லாமியர்தான் வீசியிருப்பார் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிடக்கூடாது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திலீபனின் 35-ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பின்னர், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இந்தச் சம்பவத்தை மிகுந்த பொறுப்புணர்வோடு, கவனமாக கையாள வேண்டும். ஒருபக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு, எஸ்டிபிஐ என்ற அரசியல் இயக்கத்தில் நாடெங்கிலும் உள்ள முதன்மை பொறுப்பாளர்கள் என்ஐஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், சரியாக அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பேரணி நடத்த அனுமதி கோருகிறது. குறிப்பாக, காந்தி ஜெயந்தி அன்று. காந்தியைக் கொன்ற கோட்சே எந்த அமைப்பில் இருந்தாரோ, அந்த அமைப்பு காந்தி பிறந்தநாளில் பேரணி நடத்த அனுமதி கோருகிறது.

நாம் தமிழர் போன்ற அமைப்புகள் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, ஒரு கோரிக்கையை முன்வைத்து பேரணி நடத்துவோம். காவிரி பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடத்துவோம். இதற்கெல்லாம் அனுமதி கேட்டு பலமுறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், எந்த நோக்கத்தையும் முன்வைக்காமல், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 50 இடங்களில், அதாவது மாநிலம் முழுவதும் நடத்தப்போகிறது. என்ன கோரிக்கையை முன்வைக்கிறது, என்ன பிரச்சினைகளை முன்னெடுக்கிறது என்று தெரியவில்லை. பேரணி செல்லும் இடங்களில் மதக் கலவரத்தை , வன்முறையை தூண்டுவதுதான் அதன் நோக்கமாக இருக்கும்.

கடந்த காலங்களில் ஆர்எஸ்எஸ் பாஜக உறுப்பினர்கள், தலைவர்கள் அவர்களே தங்களது கார்களிலும், அலுவலகங்களிலும் தீவைத்தது, குண்டு வைத்த சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது உண்மையிலேயே இந்த குண்டுகளை வீசுவது இஸ்லாமியர்களா அல்லது யார் என்று பார்க்கவேண்டும். இங்கு என்ன காட்டப்படுகிறது என்றால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ பொறுப்பாளர்கள் கைதுக்கு எதிராக குண்டு வீசப்படுவதாக காட்ட நினைக்கின்றனர்.

நமக்கும் பார்த்தவுடன் அவ்வாறுதான் தோன்றும். ஆனால், நான் அறிந்தவரை இஸ்லாமியர்கள் அமைதியாக இருக்க வேண்டும், தேவையற்ற பிரச்சினைகளுக்கு செல்லக்கூடாது என்று நினைப்பார்கள். இந்த மனநிலைக்கே அவர்கள் செல்லமாட்டார்கள்.

ஒரு கலவரத்தை திட்டமிட்டு உருவாக்குவதற்காக ஆர்எஸ்எஸ், பாஜகவினரே குண்டுவீசுவார்கள். கடந்த காலச் சான்றுகள் அதைத்தான் காட்டுகிறது. பாஜகவினர் வீட்டில் குண்டு வீசப்பட்டது என்றவுடன் இஸ்லாமியர்தான் வீசியிருப்பார் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிடக்கூடாது" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in