

சென்னை: விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ரத்தில், பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு, தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலைத் திட்டப்பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக விக்கிரவாண்டி- பின்னலூர் இடையிலான பணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி மாற்றுப்பாதையில் செல்வதால் நேரம் மற்றும் பணம் விரயமாகிறது.
எனவே விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகள் முடிவடையும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, மத்திய சாலை போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோப் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.