Published : 26 Sep 2022 01:02 PM
Last Updated : 26 Sep 2022 01:02 PM

அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திய பழனிசாமிக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? - துரைமுருகன் பதில்

கோப்புப் படம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

சென்னை: அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும் என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் அளித்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவர் வெளியிட்ட 25.9.2022 நாளிட்ட அறிக்கையின் மூலம் தெரிகிறது.

தளபதியின் அரசு “கையாலாத அரசு" “விடியா அரசு" “கும்பகர்ணன் தூக்கம் கொண்ட அரசு" என்று வார்த்தைகளை அறிக்கையில் கொட்டி இருக்கிறார். ஆந்திர அரசு ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப்போவதாக அம்மாநில முதலமைச்சர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
அது ஒரு பொதுக்கூட்ட செய்திதான். அந்த செய்தியை வைத்துக் கொண்டு தளபதி அரசு என்ன சாதித்துவிட்டது என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

இப்படித் தான் முன்னர் ஒரு முறை இதே கணேசபுரத்தில் அணை கட்டப் போவதாக வந்த செய்தியைப் பார்த்து சில அறிக்கை தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து முதல்வரும் நானும் கணேசபுரம் போய் பார்த்தபோது அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இவ்வரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும். இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் எந்த அணையையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x