

மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசே முழுப் பொறுப்பேற்று இயக்கிட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரத்தின் பொதுப் போக்குவரத்துக்குத் தேவையான மிக முக்கியமான திட்டம் இத்திட்டம். சென்னையில் பொது மக்கள் நலன் கருதி பயணக் கட்டணத்தைக் குறைத்து மெட்ரோ ரயில் சேவையை அரசே செயல்படுத்த வேண்டும்.
மெட்ரோ ரயில் போக்குவரத்து மூலம் லாபம் ஈட்டுவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபடலாம். குறிப்பாக ரயில் வழித்தடங்களை அதிகப்படுத்தியும், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், விளம்பரங்கள் மூலமும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை சென்னை மக்களின் போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்ற வேண்டும். அதே நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையை எக்காரணத்தை கொண்டும் தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது.
மெட்ரோ ரயில் திட்டம் சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். அரசு வசம் இருக்கும் போதே மெட்ரோ ரயில் கட்டணம் அதிக அளவில் இருப்பதால் பொது மக்கள் இப்போக்குவரத்தை பயன்படுத்த தயங்குகிறார்கள். இச்சூழலில் இந்த திட்டத்தை தனியார் வசம் ஒப்படைத்தால் பயணக் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை அரசு இழக்க நேரிடும். மேலும் கட்டணம் உயரும்.
மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் அதிகமானால் பயணிகளுக்கு போக்குவரத்து என்பது பயனுள்ளதாக அமையாது. மேலும் தற்போது இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழலும் ஏற்படும்.
இந்த ரயில் சேவையை மக்கள் நலன் கருதியும், வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அந்த வருமானத்தை மேலும் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசே முழுப் பொறுப்பேற்று இயக்கிட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.