Published : 26 Sep 2022 06:38 AM
Last Updated : 26 Sep 2022 06:38 AM

மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்: ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சங்கிலிப் பாறையைக் கடந்து செல்லும் பக்தர்கள்.

ராமேசுவரம் / திருச்சி / விருதுநகர்: மகாளய அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்காவிரி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சதுரகிரியில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இது பிதுர்கர்மா செய்ய உகந்த நாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள், மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்தால், அது அனைத்து மாதங்களிலும் தர்ப்பணம் கொடுத்ததற்கு ஈடாகும்.

இதையொட்டி கடந்த சனிக்கிழமை முதலே தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வரத் தொடங்கினர். நேற்று அதிகாலை ராமநாதசுவாமி கோயில் நடை 4 மணியளவில் திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கால பூஜை, அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும், கோயில்வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளைதரிசனம் செய்தனர். இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் நவபாஷணக் கோயில், திருப்புல்லாணி சேதுக்கரை, மாரியூா் முந்தல் கடற்கரை உள்ளிட்ட 4 இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்டன.

அம்மா மண்டபம்: இதேபோன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் நேற்றுஅதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் காவிரி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களின் உதவியுடன் தர்ப்பணம் கொடுத்து, வழிபாடு செய்தனர். இதற்காக மாநகராட்சி சார்பில்அம்மா மண்டபம் படித்துறையில்சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ரங்கம் தீயணைப்புப் படை வீரர்கள் ரப்பர் படகுகளில் உயிர் காக்கும் உடை உட்பட மீட்புப் பணி உபகரணங்களுடன் அம்மா மண்டபம் காவிரிஆற்றில் தயார் நிலையில் இருந்தனர். இதேபோன்று காவிரி ஆற்றில் வீரேஸ்வரம் கருட மண்டபம், மேலூர் அய்யனார் கோயில், சிந்தாமணி படித்துறை உள்ளிட்ட இடங்களிலும், ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

சதுரகிரி: விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் உள்ளன. பிரதோஷம், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களை ஒட்டிய4 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மகாளய அமாவாசையை முன்னிட்டு செப். 23 முதல் இன்று (26-ம் தேதி) வரை மலையேர பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மஹாளய அமாவாசை தினமான நேற்று சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும்சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர்,சந்தனம், தேன், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். நேற்று அதிகாலை 5 மணிக்கு அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் உள்ள வனத்துறை நுழைவாயில் கதவுகள் திறக்கப்பட்டு மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிற்பகல் சுமார் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரி மலையேறி வழிபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x