

விழாவில் வரவேற்புரை நிகழ்த்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது: மூத்த தலைமுறையினர், நடுவயதினர், இளம் தலைமுறையினர் என பல வயதினரும் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். இந்த மூன்றுதலைமுறையினரும் விரும்பும் விழாவாக, அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ‘மாஸ்’ விழாவாக இது அமைந்துள்ளது.
10-ம் ஆண்டு தொடக்க நாளில்,‘இந்து தமிழ் திசை’ தலையங்கம் எழுதியபோது நாங்கள் ஓர்உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். அலைபேசி, இணையதளங்கள் மூலம் இளைஞர்களின் கவனம் வெகுவாக திசைதிருப்பப்பட்டுள்ளது. இதிலிருந்து இளைஞர்களை மீட்க வேண்டுமானால், அவர்களுக்கு கிடைக்கும் விஷயங்கள் ஏதோ ஒருவகையில் சுவாரஸ்யமாக, பயனுள்ளதாக அமைய வேண்டும். அதன்மூலம் பயனுள்ள வாழ்க்கைக்கு அவர்கள் திரும்ப முடியும். எனவே, நம் தாய்மொழியாம் தமிழின் சுவையை இளைய சமுதாயத்துக்கு உணர்த்தி, அவர்களுக்குள் வாசிப்பு ரசனையை வளர்க்க வேண்டும் என்பதே அந்த உறுதிமொழி.
தமிழ் மீது குழந்தைகளுக்கு பற்றும், பிரமிப்பும் வரவேண்டும் என்றால் பெற்றோர் அதை சொல்லிக் கொடுத்து வரவைக்க வேண்டும். அந்த வகையில், தமிழில் நல்ல கட்டுரைகள், இலக்கியவாதிகளின் படைப்புகள், அறிவியல், வரலாறு என அனைத்து துறைகளிலும் உள்ள சிறப்பான விஷயங்களை தமிழில் தருகிறது ‘இந்து தமிழ் திசை’. எனவே, குழந்தைகளிடம் தமிழ்ப் பற்றை வளர்ப்போம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்யும். அடுத்ததலைமுறையை தமிழ் மீது நம்பிக்கை கொண்ட தலைமுறையாக உருவாக்குவோம். அடுத்த தலைமுறையை தமிழோடு சேர்த்து வளர்ப்போம்.