Published : 26 Sep 2022 06:32 AM
Last Updated : 26 Sep 2022 06:32 AM

நல்ல தமிழை படிப்போம், நல்ல தமிழை கேட்போம் - கலந்துரையாடலில் தமிழ் ஆளுமைகள் வலியுறுத்தல்

‘தமிழை எதிர்காலத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பது எப்படி?’ என்ற தலைப்பில் கலந்துரையாடிய இயக்குநர் கரு.பழனியப்பன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன்.

சென்னை: ‘யாதும் தமிழே’ விழாவின் முதல்நிகழ்வாக ‘தமிழை எதிர்காலத்துக்கு கொண்டுபோய் சேர்ப்பதுஎப்படி’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தாளரும், பதிப்பாளருமான ஆழி செந்தில்நாதன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, இயக்குநரும், பேச்சாளருமான கரு.பழனியப்பன் ஆகியோர் கலந்துரையாடினர்.

அவர்கள் கூறியதாவது: எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன்: தமிழின் எதிர்காலம் என பேசும்போது, அதன் கடந்தகாலத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.ஒவ்வொரு காலத்திலும் எதிர்காலத்தைப் பற்றி பார்க்கும் பார்வை நமக்கு உண்டு. மரபியல் ரீதியாக, அறிவியல் ரீதியாக பார்த்தால் தமிழின் வளர்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தில் இருக்கிறது.

மொழியின் எதிர்காலம் என்றால், அதுமக்களின் எதிர்காலமும்தான். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பல தொல்லியல் ஆய்வுகளில், இந்தியாவில் பேசக்கூடிய மொழிகளில் தமிழ் மொழிக்குதான் முதன்முதலில் வரிவடிவம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழின் எதிர்காலம் ஒளி மிகுந்ததாக சிறப்பானதாக இருக்கிறது.

இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் தொழில்நுட்பங்களின் உதவியால் நம் தமிழை தக்கவைத்துக்கொள்ள முடியும்.ஒரு மொழி பேசும் மக்கள், தங்கள் எதிர்காலம், அந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய அதிகாரம், அந்த அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய அரசியல், அதற்கான பண்பு நலன்களுடன் இருந்தால், அந்த மொழிக்கு எந்த பிரச்சினையும் வராது.

பேராசிரியர் பர்வீன் சுல்தானா: தமிழில் பேசினாலோ, எழுதினாலோ மிக எளிதாக மக்களை சென்று சேர்ந்துவிடும். அந்த அளவுக்கான பொருள் தமிழில் உள்ளது. அதுவும் தமிழகத்தில் மட்டும்தான் மொழிக்கு கடவுள் வாழ்த்து என்று பெயர் வைத்திருக்கிறோம். வேறு எந்த மொழிக்கும் இந்த சிறப்பு இல்லை.

நமது மரபுகளை இளைஞர்களுக்கு மீட்டு அளிக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. மரபை விட்டுவிடாமல் தூக்கிப் பிடிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு. அது எந்த மதத்தவராக இருந்தாலும் சரி. இதை எப்போது அடுத்த தலைமுறைக்கு கொடுக்கிறோமோ, அப்போதுதான் ‘யாதும் தமிழ்’ என்ற சொல்லை முழுமையாக அனுபவிக்கக்கூடிய நிலை வரும்.

நமக்கான உரிமை, நிலம், பொருளாதாரம், கல்வி, மொழியின் மீதான நாட்டம், ரசனை அனைத்தையும் தக்கவைத்துக் கொண்டால், அடுத்த தலைமுறைக்கு ‘யாதும் தமிழ்’என்பதை கொண்டுசெல்வது சிரமமாக இருக்காது.

இயக்குநர் கரு.பழனியப்பன்: எளிமையாக சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களிடம் படிக்காத அடுத்த தலைமுறைக்கு தமிழ் எப்படி போய் சேரும்? நமது மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்கள். லைக் போடுவதில் குழப்பம் வந்தால் ஆங்கிலத்தை நோக்கி சென்றுவிடுவார்கள். இதில் குழப்பத்தை எப்படி தீர்த்துக் கொள்வது? அம்மா, அப்பா, நாளிதழ், தொலைக்காட்சியில் யார்நல்ல தமிழ் பேசுகிறார்கள்? நல்ல தமிழை தெரிந்துகொள்ள நல்ல தமிழை படிக்க வேண்டும். நல்ல தமிழ்ப் பேச்சை கேட்க வேண்டும். அதற்கெல்லாம் மெனக்கிடாமல், சவுகரியமாக இருக்க பழகிவிட்டோம். அப்படி இருக்க, தமிழ் எப்படி தாக்குப் பிடித்தது? குழந்தைகளுக்கு தமிழில்கூட பெயர்வைக்காதது யார்? நாட்டை கொண்டாடுகிறோம்; மொழியை கொண்டாடுகிறோமா? நமக்கு நாட்டுப்பற்று இல்லை என வட இந்தியர்கள் கூறுவார்கள். ஆனால், நமக்கு மொழிப் பற்று அதிகமாக உண்டு.

ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் இருக்கிறதா என பாருங்கள். இருந்தால் மட்டுமே, அந்த வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.தமிழ் இருக்கும் இடமெல்லாம் அதை பயன்படுத்துங்கள். இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கு தமிழை நம்மால் கொண்டு சேர்க்க முடியும். நல்ல தமிழை கேட்க இந்த தலைமுறையும் தயாராகத்தான் இருக்கிறது. சொல்லத்தான் ஆள் இல்லை. தற்போது இருக்கும் நல்ல சொற்களை புழக்கத்தில் வைக்க வேண்டும். இதை செய்தாலே அடுத்த நிலைக்கு சென்றுவிடலாம். இதில் வேறு எதுவும் உடன் வந்து சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x